பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைந்த கேரள அரசுக்கு இந்திய கம்யூனிஸ்டு கடும் எதிர்ப்பு


பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைந்த கேரள அரசுக்கு இந்திய கம்யூனிஸ்டு கடும் எதிர்ப்பு
x

கோப்புப்படம்

கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்த நிலையில் திடீர் மனமாற்றமாக கேரள அரசு, மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ திட்டத்தை ஏற்றது.

திருவனந்தபுரம்,

மத்திய அரசு கடந்த 2022-ம் ஆண்டு முதல் பி.எம்.ஸ்ரீ கல்வி திட்டத்தை கொண்டு வந்தது. இதில் தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம், பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்கள் இணைய தொடர்ந்து மறுத்தது.

இதனால் மத்திய அரசு அந்த மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் எஸ்.எஸ்.ஏ. திட்டத்திற்கு அனுப்ப வேண்டிய நிதியை நிறுத்தி வைத்தது. இந்த திட்டத்தை ஏற்றால் மட்டுமே அந்த திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்படும் என மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் கறாராக கூறி விட்டார். இதன் மூலம் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு ரூ.1,500 கோடி முதல் ரூ.3,000 கோடி வரை நிதி ஒதுக்காமல் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.

ஆனால் பி.எம்.ஸ்ரீ கல்வி திட்டம் மூலம் ஆர்.எஸ்.எஸ்ஸின் சிந்தாத்தத்தை மத்திய அரசு புகுந்த நினைப்பதாக தமிழக அரசு தொடர்ந்து கடுமையாக எதிர்த்து வருகிறது. இந்த திட்டம் மூலம் மத்திய அரசு, மாநிலங்களின் கூட்டாட்சிக்கு எதிராக செயல்படுவதாகவும் குற்றம்சாட்டியது.

மேலும், இந்த திட்டத்தை ஏற்றால் தான் நிதி என்றால், அந்த நிதியே வேண்டாம் என தமிழக அரசு காட்டமாக பதிலடி கொடுத்துள்ளது. அதே பாணி நடைமுறையை தான் கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் பின்பற்றியது.

இந்தநிலையில் தனது கொள்கைக்கு மாறாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அரசு கேரளாவில் பி.எம்.ஸ்ரீ திட்டத்தை கொண்டு வர சம்மதித்துள்ளது. அதாவது பி.எம்.ஸ்ரீ. திட்டத்துக்கான மத்திய அரசுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கேரள கல்வித்துறை செயலாளர் கையெழுத்திட்டுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்டு கடும் எதிர்ப்பு

இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்டு கட்சி கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. மேலும் எதிர்க்கட்சியான காங்கிரஸ், பா.ஜனதாவுடன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மறைமுக கூட்டணி வைத்துள்ளது, பி.எம்.ஸ்ரீ திட்டம் மூலம் வெட்ட வெளிச்சத்துக்கு வந்துள்ளது என குற்றம்சாட்டியது.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பினோய் விஸ்வம் கூறுகையில், மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ பள்ளி கல்வி வளர்ச்சி திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் கேரள அரசு கையெழுத்திட்டதாக வெளிவரும் செய்தி உண்மையானால், அது கூட்டணி தர்மத்திற்கு எதிரானது. இது தொடர்பாக, இடது முன்னணியில் அனைத்து கட்சிகளுடன் ஆலோசிக்கப்பட வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் தேசிய பொது செயலாளர் எம்.ஏ.பேபியின் கருத்தை கூட கேரள அரசு மதிக்கவில்லை என குற்றம்சாட்டினார். மேலும் இதுதொடர்பாக, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொது செயலாளருக்கு கடிதம் அனுப்பி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் தற்போது கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் விரிசல் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மாணவர் அமைப்பு எதிர்ப்பு

கேரளாவில் ஆளும் கட்சியின் ஆதரவு மாணவர் அமைப்பான இந்திய மாணவர் பெருமன்றமும் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. அந்த அமைப்பு சார்பில் மாநில செயலாளர் பி.எஸ். சஞ்சீவ் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் கேரள அரசு கையெழுத்திட்ட விவகாரம் சந்தேகத்தை எழுப்புகிறது. இது தொடர்பாக கட்சியில் எதிர்ப்பை முன் வைப்போம். தேசிய கல்வி கொள்கை திட்டத்தில் உள்ள மதவாத நிலைப்பாடு எதிர்க்கப்பட வேண்டிய முக்கிய விஷயமாகும். அது மாணவ சமூகத்திற்கு பெரும் ஆபத்தாக அமையும் என்றார்.

இந்நிலையில் மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ. கல்வி திட்டத்துடன் இணைந்த கேரள அரசுக்கு நன்றி தெரிவித்து மத்திய கல்வித் துறை சார்பில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. அதாவது கேரளாவில் பள்ளி கல்வியை மேம்படுத்தவும், நவீன அடிப்படை வசதிகள், ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைத்தல் உள்பட பல்வேறு திட்டங்கள் இந்த ஒப்பந்தத்தின் மூலம் நனவாகும், கேரள அரசுக்கு இது ஒரு மைல்கல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story