

திருவனந்தபுரம்,
கேரளாவில் சுங்கச்சாவடி கட்டண வசூலில் வடமாநில ஊழியர்கள் ரூ. 7 லட்சம் மோசடி செய்துள்ளனர்.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் ஒளவண்ண பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி உள்ளது. இந்த சுங்கச்சாவடி வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. இந்த வாகனங்கள் அனைத்தும் சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தி கடந்து செல்கின்றன. கட்டணம் அனைத்தும் கியூ ஆர் ஸ்கேன் மூலம் டிஜிட்டல் முறையில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த வாகன சுங்கச்சாவடியில் வட மாநிலங்களை சேர்ந்த இளைஞர்கள் ஊழியர்களாக செயல்பட்டு வந்தனர்.
இந்நிலையில், இந்த சுங்கச்சாவடியில் பணியாற்றி வந்த வடமாநில ஊழியர்கள் சுங்கச்சாவடி கட்டண வசூலில் ரூ. 7 லட்சம் மோசடி செய்துள்ளனர். கட்டணம் வசூலிப்பதற்கான அதிகாரப்பூர்வ வங்கிக்கணக்கின் கியூ ஆர் கோடுக்கு பதிலாக தங்கள் தனிப்பட்ட வங்கிக்கணக்கின் கியூ ஆர் கோடை மாற்றி வைத்துள்ளனர். இதனால், அந்த சுங்கச்சாவடி வழியாக செல்லும் வாகனங்கள் செலுத்தும் பணம் அனைத்தும் தனிப்பட்ட வங்கிக்கணக்குக்கு சென்றுள்ளது.
இது குறித்து அறிந்த சுங்கச்சாவடி மேலாளர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சுங்கச்சாவடி கட்டண வசூலில் ரூ. 7 லட்சம் மோசடி செய்த ஊழியர்களான வடமாநிலங்களை சேர்ந்த விபின் (வயது 23), உமா சங்கர் (வயது 40), மன்டி (வயது 21), ஹரிமோகன் (வயது 19), ஷிவம் (வயது 21), நவீன்சிங் (வயது 24) ஆகிய 6 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 6 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.