கேரளாவில் காட்டு யானையிடம் இருந்து நூலிழையில் உயிர் தப்பிய சுற்றுலா பயணிகள்

எதிரே மற்றொரு வாகனம் வந்ததால் காட்டு யானையின் கவனம் அந்த வாகனத்தின் மீது திரும்ப, சுற்றுலா பயணிகள் உயிர்தப்பினர்.
கேரளாவில் காட்டு யானையிடம் இருந்து நூலிழையில் உயிர் தப்பிய சுற்றுலா பயணிகள்
Published on

கேரள மாநிலம் தலப்புழா பகுதியை சேர்ந்த சிலர் ஒரு காரில் குடும்பத்துடன் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர். தொடர்ந்து அவர்கள் முதுமலை வழியாக பந்திப்பூர் புலிகள் காப்பகத்திற்கு சென்றுவிட்டு அங்கிருந்து காரில் கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

முத்தங்கா சரணாலய சாலையில் சென்றபோது சாலையோரம் குட்டிகளுடன் 3 காட்டு யானைகள் நின்று கொண்டிருந்தன. இதனை கண்டதும் சுற்றுலா பயணிகள் காரை நிறுத்தி கீழே இறங்கி சென்று ஆபத்தை உணராமல் காட்டு யானைகளை புகைப்படம், வீடியோ எடுக்க முயன்றனர். அப்போது அதில் ஒரு காட்டு யானை அவர்களை நோக்கி ஆக்ரோஷமாக பிளிறியவாறு வேகமாக ஓடி வந்தது.

இதனை சற்றும் எதிர்பாராத சுற்றுலா பயணிகள் காட்டு யானையிடம் இருந்து தப்பிக்க காரில் ஏறுவதற்காக ஓட்டம் பிடித்தனர். இதில் 2 பேர் காரில் ஏறுவதற்குள் காட்டுயானை நெருங்கியதால் அவர்கள் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர். இதில் ஒருகட்டத்தில் ஒருவர் கால்தவறி கீழே விழுந்தார். இதனால் அவர் காட்டு யானையின் பிடியில் சிக்கி விடுவார் என நெஞ்சம் பதைபதைத்த வேளையில் காட்டுயானை தும்பிக்கை மற்றும் காலால் அவரை லேசாக தட்டிவிட்டது. இந்த சமயத்தில் எதிரே மற்றொரு வாகனம் வந்ததால் அதன்பக்கம் காட்டு யானையின் கவனம் திசை திரும்பியது. தொடர்ந்து அந்த வாகனத்தை காட்டு யானை விரட்டி சென்று பாதியில் நின்றுவிட்டது.

இதற்கிடையே கீழே விழுந்த நபர் உருண்டவாறு மரத்தடியை நோக்கி சென்றார். தொடர்ந்து 2 பேரும் காரில் ஏறி அங்கிருந்து புறப்பட்டு சென்று உயிர் தப்பினர். அவர்கள் 2 பேரும் காட்டுயானையிடம் இருந்து நூலிழையில் உயிர்தப்பிய இந்த சம்பவத்தை அந்த வழியாக வாகனத்தில் வந்த சிலர் புகைப்படம், வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர். தற்போது அவை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com