கேரள பெண் கற்பழிப்பு: ஐ.எஸ். வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி சென்னையில் கைது

கேரள மாநிலம் எர்ணாகுளம் போலீஸ் சூப்பிரண்டிடம் கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண் கடந்த டிசம்பர் மாதம் ஒரு புகார் கொடுத்தார்.
கேரள பெண் கற்பழிப்பு: ஐ.எஸ். வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி சென்னையில் கைது
Published on

புதுடெல்லி,

கேரள மாநிலம் எர்ணாகுளம் போலீஸ் சூப்பிரண்டிடம் கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண் கடந்த டிசம்பர் மாதம் ஒரு புகார் கொடுத்தார். அதில், தான் தற்போது குஜராத் மாநிலத்தில் வசிப்பதாகவும், தன்னை முகமது ரியாஸ் என்பவர் கற்பழித்து, அந்த காட்சிகளை பதிவு செய்ததாகவும், தன்னை மிரட்டி கட்டாயப்படுத்தி முஸ்லிமாக மாற்றி, போலி ஆவணங்கள் தயாரித்து திருமணம் செய்துகொண்டதாகவும் கூறினார். முகமது ரியாசும், அவரது கூட்டாளிகளும் தன்னை சிரியாவுக்கு (ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ப்பதற்காக) அனுப்புவதற்காக சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவுக்கு அழைத்துச் சென்றதாகவும் கூறியிருந்தார்.

இந்த புகாரில் கேரள போலீசார் ஏற்கனவே அந்த பெண்ணின் மாமியார் உள்பட சில குற்றவாளிகளை கைது செய்தனர். ஜனவரி 24-ந் தேதி இந்த வழக்கை மத்திய உள்துறை தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்.ஐ.ஏ.) மாற்றியது. தேசிய புலனாய்வு அதிகாரிகள் முக்கிய குற்றவாளியான ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்புவைத்து இருப்பதாக சந்தேகிக்கப்படும் முகமது ரியாசை கண்காணித்து வந்தனர். கடந்த 2-ந் தேதி சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு வந்து இறங்கிய முகமது ரியாசை அதிகாரிகள் மடக்கிப்பிடித்தனர். அவரிடம் இருந்து 2 செல்போன்கள், ஒரு பென்டிரைவ் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

பின்னர் அவரை கொச்சி என்.ஐ.ஏ. கிளை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர். நேற்று முன்தினம் அவரை கைது செய்து எர்ணாகுளம் என்.ஐ.ஏ. தனிக்கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தவும் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த தகவல்கள் டெல்லியில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com