கேரளா: இளம்பெண் 2 நாட்களாக அடைத்து வைத்து கூட்டு பலாத்காரம்; மேலும் 2 பேர் கைது

இதில் தலைமறைவாக இருந்த வயநாட்டை சேர்ந்த அம்மு மற்றும் சஞ்சு ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கோப்புப்படம்
Published on: 

கொச்சி

கேரளத்தில் மயக்க மருந்து கொடுத்து, இளம்பெண்ணை 2 நாட்களாக அடைத்து வைத்து கூட்டு பலாத்காரம் செய்த சம்பவத்தில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கேரளாவின் எர்ணாகுளத்தில் தன் கணவருடன் வசித்து வந்த இளம்பெண் ஒருவர், ஆன்லைனில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்றை பார்த்துள்ளார். அதில், ஸ்பா மேலாளர் பணிக்கு ஆள் தேவைப்படுகிறது என தெரிவிக்கப்பட்டு இருந்தது. நிறைய சலுகைகளும் அறிவிக்கப்பட்டு இருந்தன.

தங்கும் விடுதி

இதனையடுத்து, அவர் கடந்த 2-ந்தேதி காலையில், மேலாளர் பணிக்காக நடந்த நேர்காணலில் கலந்து கொண்டார். இதில் அவர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதன்பின்னர் கொடூர சம்பவம் நடந்துள்ளது.

இதுபற்றி கொச்சி மாநகர காவல் ஆணையாளர் காளிராஜ் மகேஷ் குமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, இதன் பின்னர் அன்று மாலை, அக்குழுவை சேர்ந்த பெண் ஒருவர், பாதிக்கப்பட்ட பெண்ணை தொடர்பு கொண்டு, பணி சாராத சந்திப்பு எனக்கூறி இடப்பள்ளியில் உள்ள தங்கும் விடுதிக்கு அழைத்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை

இதில், மற்ற ஊழியர்களும் இருப்பார்கள் என்றும், அந்த சந்திப்பின் ஒரு பகுதியாக அவருக்கு ஒரு புடவை வழங்கப்படும் என்றும் கூறி தங்கும் விடுதிக்கு வரும்படி அழைத்தார்.

அந்த பெண் விடுதியை அடைந்ததும், கட்டாயப்படுத்தி மது குடிக்க வைக்கப்பட்டார். அந்த மதுவில் மயக்க மருந்து கலக்கப்பட்டிருந்தது. இதனால், அவர் சுயநினைவை இழந்து விட்டார். அந்த விடுதியில், அக்டோபர் 2 மற்றும் 3 ஆகிய 2 நாட்களாக அவர் சட்டவிரோதமாக பிடித்து வைக்கப்பட்டு, தொடர்ச்சியான பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உள்ளார். இந்த சம்பவம் மொபைல் போனில் வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டது.

உடலில் காயங்கள்

அந்த பெண் மயக்கம் தெளிந்து எழுந்ததும், நடந்த விசயங்களை அறிந்து அதிர்ச்சியடைந்து உள்ளார். அவர் மிகுந்த அதிர்ச்சியில் இருந்ததால், புகார் அளிக்க தயங்கினார். அவரது தோழி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே நாங்கள் வழக்குப்பதிவு செய்தோம். மருத்துவர் மேற்கொண்ட பரிசோதனையில், பாலியல் வன்கொடுமையால் உடலில் பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளன என தெரிய வந்துள்ளது என்று ஆணையாளர் கூறினார்.

இந்த சம்பவத்தில் அவர் கடுமையாக உடல் மற்றும் மனதளவில் பாதிக்கப்பட்டார். பின்னர் அவர் கொச்சியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பெண் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பான விசாரணையில், ஸ்ரீராஜ் (வயது 30) மற்றும் ஜித்து (வயது 27) ஆகிய 2 பேர் அடையாளம் காணப்பட்டு, கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு நீதிமன்ற காவல் விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

பெண்ணுக்கு தொடர்பு

விசாரணையில், ஸ்ரீராஜ் கொச்சியில் நான்கு ஸ்பா மையங்களை நடத்தி வருகிறார் என தெரிய வந்துள்ளது. இதனால், உடல்நல மையங்கள் என்ற போர்வையில், பணம் பறிக்கும் கும்பல்கள், நிழல் உலக குழுக்கள் அல்லது பாலியல் கடத்தல் கும்பலுடன் இந்த குற்றவாளிகளுக்கு ஏதும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் காவல் துறையினர் தற்போது விசாரித்து வருகின்றனர்.

வழக்கில் தலைமறைவாக உள்ள இரண்டு சந்தேக நபர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவர்களில் ஒரு பெண் மற்றும் பாதிக்கப்பட்ட பெண் தப்பிக்க முயன்றபோது அவரை தடுத்து நிறுத்திய மற்றொரு நபரும் அடங்குவர்.

இதில் தலைமறைவாக இருந்த வயநாட்டை சேர்ந்த அம்மு மற்றும் சஞ்சு ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த வழக்கில், இளம்பெண்ணை விடுதிக்கு அழைத்து செல்வதில் அம்மு என்ற சரண்யா, முக்கிய பங்கு வகித்திருக்க கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். சஞ்சு, அவர் தப்பி விடாமல் தடுத்திருக்கிறார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com