

திருவனந்தபுரம்,
தென்மேற்கு பருவமழை கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கொட்டி தீர்த்து வருகிறது. கேரளாவில் தொடர்ந்து இடைவிடாது பெய்யும் பேய் மழையால் அம்மாநிலம் வெள்ளத்தில் மிதக்கிறது. குறிப்பாக பத்தினம்பட்டா, மலப்புரம் உள்ளிட்ட 14 மாவட்டங்களிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிப்போய் உள்ளது. அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் மாநிலத்தின் அணைகள் முழுவதும் நிரம்பி உள்ளன. எனவே 35 அணைகளில் இருந்து உபரிநீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. இதனால் தாழ்வான பகுதிகள் அனைத்தும் நீரில் மூழ்கி உள்ளன.
லட்சக்கணக்கான மக்கள் வீடு, உடைமைகளை இழந்து அரசின் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தொடர்மழையால், அனைத்து ஆறுகளிலும் வெள்ள நீர் ஆபத்தான கட்டத்தைத் தாண்டி பாய்ந்து செல்கிறது. மாநிலத்தில் மீட்புப்பணியில் ராணுவத்தினர், பேரிடர் மீட்புக்குழுவினர், போலீஸார், தீயணைப்பு படையினர் எனப்பலரும் ஈடுபட்டு வருகின்றனர். பலத்த மழை காரணமாக கொச்சி விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. அங்கு வர வேண்டிய விமானங்கள் அனைத்தும் திருவனந்தபுரத்துக்கு திருப்பிவிடப்பட்டுள்ளது. கொச்சி மெட்ரோ ரயில் நிலையமும் மூடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கனமழையால் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு உள்பட மழை தொடர்பான சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது. கடற்படை தனது பயிற்சியை ரத்து செய்துவிட்டு உடனடியாக மீட்பு நடவடிக்கையில் இறங்க தெற்கு நேவல் கமொண்டட் உத்தரவிட்டுள்ளது. வெள்ள நீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஹெலிகாப்டர் மூலமாக மீட்கப்பட்டு வருகின்றனர்.