

இடுக்கி,
இடுக்கி பகுதியில் சுற்றித்திரியும் 'சக்கக்கொம்பன்' யானைக்கு கண்காணிப்பு கருவி பொருத்தும் பணியில் வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
கேரளாவின் வனப்பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய கிராமங்களில் யானை-மனித மோதல்கள் தொடர்ந்து தீவிரமடைந்து வருகின்றன. இடுக்கி, வயநாடு, கண்ணூர், மலப்புரம் போன்ற மாவட்டங்களில் பயிர் சேதம், உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளன. இதனை குறைக்க தடுப்பு வேலிகள், டிரோன் கண்காணிப்பு என பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இடுக்கி மாவட்டத்தின் சின்னக்கானல் பகுதியில் சுற்றி திரியும் 'சக்கக் கொம்பன்' என்ற காட்டு யானை கிராம மக்களை மிரட்டி வருகிறது. இந்த யானையால் கடந்த சில மாதங்களில் 4 பேர் உயிரிழந்தனர். இந்த யானை அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்குள் பலாப்பழங்களை தேடி வருவதும், மக்களை தாக்குவதும், சொத்துகளை சேதப்படுத்துவதும் தொடர்கதையாகி வருகிறது.
இதனை தொடர்ந்து, அந்த காட்டு யானைக்கு மயக்க மருந்து செலுத்தி, அதன் கழுத்தில் ரேடியோ காலர் (கண்காணிப்பு கருவி) பொருத்த அரசு முடிவு செய்தது. இதற்காக 140-க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இதற்காக நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட முயற்சி, மோசமான வானிலை காரணத்தால் கைவிடப்பட்ட நிலையில், தற்போது வனத்துறையினர் புதிய வியூகத்துடன் அடுத்தகட்ட நடவடிக்கையை தொடங்கி உள்ளனர். இதற்காக அந்த பகுதியில் சுற்றி திரியும் 17-க்கும் மேற்பட்ட யானைகளை கண்காணித்து வருகின்றனர்.
காட்டு யானையான சக்கக்கொம்பனுக்கு அந்த பகுதி மக்கள் பயந்தாலும் மரியம்மா, என்ற 65 வயது மூதாட்டி பயப்பட்டாமல் தனது சிறிய வீட்டில் தனியாக வசித்து வருகிறார். அடிக்கடி தன் வீட்டை கடந்து செல்லும் 'சக்கக்கொம்பன்' யானையை ஒரு பாதுகாவலனாக கருதுகிறார். மரியம்மா தனது 12-வது வயதில், தனது தந்தையுடன் தமிழ்நாட்டில் இருந்து சின்னக்கனலுக்கு வந்தார். 50 ஆண்டுகளுக்கு மேலாகியும், அவர் இன்றும் அதே பகுதியில்தான் வசித்து வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "நான் விளக்குகளை எரியவிட்டு, வீட்டின் கதவை மூடிவிட்டு தூங்குகிறேன். தனியாக இருப்பதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. என்னை பாதுகாக்கவே சக்கக்கொம்பன் அங்கே இருப்பதாக நான் உணர்கிறேன். யானை இந்த வழியாக வருவதால், திருடர்கள் இங்கு வரமாட்டார்கள். என் கணவர் ராணுவத்தில் இருந்தவர்” என்றார்.