

கோழிக்கோடு,
கேரள மாநிலத்தில் 43 வயது மதிக்கத்தக்க ஒருவருக்கு நிபா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோழிக்கோட்டை சேர்ந்த அந்த நபரின் மாதிரிகள் இறுதி உறுதிப்படுத்தலுக்காக புனேயில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. அதன் முடிவுகள் விரைவில் வெளியாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முதற்கட்ட பரிசோதனையில் தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபர் முதலில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பின்னர் கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தற்போது அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் நிபா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியும் பணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர். அனைவரையும் கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளையும் சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை மந்திரி கே. முரளீதரன் கூறியதாவது:-
நிபா வைரஸ் பாதிக்கப்பட்ட நபர் அண்மையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார். அந்த வீட்டை அவர் சுத்தம் செய்தபோது தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அறிகுறிகள் மற்றும் முதற்கட்ட பரிசோதனை அடிப்படையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நோயாளிக்கு முதலில் காய்ச்சல் ஏற்பட்டு பின்னர் குறைந்தது. அதன்பிறகு மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இறுதி ஆய்வு முடிவின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளாமல், சுகாதாரத்துறை வழங்கும் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.