கலிதா ஜியா மறைவு: பிரதமர் மோடி இரங்கல்

வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா டாக்காவில் இன்று உயிரிழந்தார்.
புதுடெல்லி,
அண்டை நாடான வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவருமான கலிதா ஜியா (80), இதயம் மற்றும் நுரையீரல் தொற்று நோய் காரணமாக டாக்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் 13-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிறப்பு மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்த நிலையில், கலிதா ஜியா சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவருக்கு வயது 80. கலிதா ஜியா கடந்த 1991-96 மற்றும் 2001-06 என இரு முறை வங்காளதேச பிரதமராக இருந்தவர் ஆவார். அடுத்த ஆண்டு வங்கதேசத்தில் பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில், கலிதா ஜியாவின் மறைவு அக்கட்சிக்குப் பின்னடைவாக கருதப்படுகிறது.
அவரது மறைவுக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பிரதமர் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “முன்னாள் பிரதமர் காலிதா ஜியா டாக்காவில் காலமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கும், வங்காளதேச மக்கள் அனைவருக்கும் எங்களின் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த துயரமான இழப்பைத் தாங்கிக்கொள்ள அவரது குடும்பத்தினருக்கு எல்லாம் வல்ல இறைவன் மன வலிமையை வழங்குவாராக.
2015-ம் ஆண்டு டாக்காவில் நடைபெற்ற அவருடனான எனது சந்திப்பை நினைவுகூர்கிறேன். அவரது தொலைநோக்குப் பார்வையும், மரபும் நமது கூட்டாண்மையை தொடர்ந்து வழிநடத்தும் என்று நம்புகிறோம். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.






