காலிஸ்தானிய பயங்கரவாதி தல்லாவுக்கு லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்துடன் தொடர்பு; அதிர்ச்சி தகவல்

காலிஸ்தானிய பயங்கரவாதி அர்ஷ்தீப் தல்லாவுக்கு, லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு உள்ளது என அதிர்ச்சி தகவல் வெளிவந்து உள்ளது.
காலிஸ்தானிய பயங்கரவாதி தல்லாவுக்கு லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்துடன் தொடர்பு; அதிர்ச்சி தகவல்
Published on

புதுடெல்லி,

கனடாவில் காலிஸ்தானியரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதில், இந்தியா மீது கனடா பிரதமர் கூறிய குற்றச்சாட்டு, தொடர்ந்து இரு நாட்டு தூதர்கள் வெளியேற்றம் மற்றும் தூதரக விசா நிறுத்தம் என அடுத்தடுத்த நடவடிக்கைகள் பரபரப்பை ஏற்படுத்தின.

இந்த சூழலில், 2 கும்பல்களுக்கு இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் சுக்தூல் சிங் என்ற மற்றொரு காலிஸ்தான் பயங்கரவாதி கனடாவின் வின்னிபெக் நகரில் சில நாட்களுக்கு முன் கொல்லப்பட்டார். அவர், 2017-ம் ஆண்டு கனடாவுக்கு போலி ஆவணங்கள் மூலம் சென்றுள்ளார் என கூறப்படுகிறது. இவர், அர்ஷ்தீப் தல்லா என்பவரின் நெருங்கிய கூட்டாளியாக செயல்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், கனடாவை சேர்ந்த காலிஸ்தானிய பயங்கரவாதியான அர்ஷ்தீப் தல்லாவுக்கு, பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா என்ற பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு உள்ளது என தெரிய வந்துள்ளது.

பஞ்சாப்பில் உள்ள இந்து மத தலைவர்களை இலக்காக கொண்டு செயல்பட்ட விவகாரத்தில் அவர் தேடப்படுபவர் என டெல்லி போலீசார் கண்டறிந்துள்ளனர்.

இந்து அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை குறிவைத்து, தல்லா திட்டமிட்டு இருந்த விவரங்களை டெல்லி போலீசார் இந்த ஆண்டு தொடக்கத்தில் கண்டுபிடித்தனர்.

டெல்லியின் ஜகாங்கீர்புரி பகுதியில் ஜக்ஜீத் சிங் ஜக்கா மற்றும் நவ்சத் ஆகிய இரண்டு பேர், கடந்த ஜனவரியில் போலீசார் நடத்திய சோதனையின்போது கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது சட்டவிரோத செயல்கள் (தடுப்பு) சட்டம் பாய்ந்தது.

இதனையடுத்து, 2 மாதங்களுக்கு பின்னர் டெல்லி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதில், ஜக்காவுக்கு தல்லாவுடன் தொடர்பு இருந்தது விசாரணையில் தெரிய வந்தது. பஞ்சாப்பில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட தயாராகும்படி ஜக்காவை, தல்லா கேட்டு கொண்டுள்ளார்.

தல்லாவுக்கு சுஹைல் என்ற லஷ்கர்-இ-தொய்பா இயக்க பயங்கரவாதியுடன் தொடர்பு இருந்தது. சுஹைல், தல்லா இருவரின் உத்தரவின்படி, அவர்கள் டெல்லி ஜகாங்கீர்புரியில் இந்து சிறுவனை கொடூர கொலை செய்து, வீடியோ ஒன்றை அவர்களுக்கு அனுப்பி வைத்தனர். நவுசத், ஜக்கா இருவருக்கும் அவர்களின் விசுவாசத்திற்காக ரூ.2 லட்சம் பணம் வழங்கப்பட்டு உள்ளது. பஞ்சாப்பில் சாதுக்கள் மற்றும் மத தலைவர்களை கொலை செய்வதற்கும் பணி வழங்கப்பட்டு உள்ளது.

இதற்காக பணம், ஆயுதங்கள் வழங்கப்பட்டு உள்ளன. 25 வழக்குகளில் குற்றவாளியாக தேடப்படும் தல்லா (வயது 27), பஞ்சாப்பின் மொகா பகுதியை சேர்ந்தவர். இவருக்கு எதிராக கொலை, குற்ற சதி திட்டம் மற்றும் ஆயுத சட்டம் மற்றும் போதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com