நேரு பிறந்தநாள்: காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி

இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் 135வது பிறந்தநாள் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது.
நேரு பிறந்தநாள்: காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி
Published on

புதுடெல்லி,

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் 135வது பிறந்தநாள் இன்று (நவ.14) நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவை பூஜ்ஜியத்தில் இருந்து உச்சத்திற்கு கொண்டு சென்றவர். நவீன இந்தியாவின் சிற்பி. அறிவியல், பொருளாதாரம், தொழில்துறை மற்றும் பல்வேறு துறைகளில் இந்தியாவை வளர்ச்சியடைய செய்தவர். வேற்றுமையில் ஒற்றுமை என்ற செய்தியை நாட்டிற்கு தொடர்ந்து வழங்கியவர். ஜனநாயகத்தின் அச்சமற்ற பாதுகாவலரும், நமது உத்வேகத்தின் ஆதாரமுமான நேருவின் 135வது பிறந்தநாளில், நாட்டிற்கு அவர் ஆற்றிய பங்களிப்பை நாம் நினைவுகூருகிறோம். இந்தச் சந்தர்ப்பத்தில், 'தி டிஸ்கவரி ஆப் இந்தியா' புத்தகத்திலிருந்து ஒரு பகுதியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "நவீன இந்தியாவின் தந்தையும், இந்திய நிறுவனங்களை உருவாக்கியவருமான நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளில் மரியாதை செலுத்துகிறேன். ஜனநாயகம், முற்போக்கான, அச்சமற்ற, தொலைநோக்கு பார்வையை உள்ளடக்கிய நமது லட்சியங்கள் மற்றும் இந்துஸ்தானின் தூண்கள் எப்போதும் மாறாமல் இருக்கும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளையொட்டி அவரது சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரை நினைவுகூர்ந்த பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள பதிவில், "நவீன இந்தியாவை உருவாக்கியவருக்கு சல்யூட், பயம் உலகின் அனைத்து தீமைகளுக்கும் வேர்.

பல தசாப்தங்கள் போராடி எண்ணற்ற தியாகங்களுக்கு பிறகு நாம் சுதந்திரம் அடைந்தபோது, அப்பாவி மக்களை பயமுறுத்தும் மற்றும் தவறாக வழிநடத்தும் அரசியலில் ஈடுபடுபவர்கள் இருந்தனர். ஜவஹர்லால் நேரு அதை கடுமையாக எதிர்த்தார் மற்றும் சாதாரண மக்களிடம் பயப்பட வேண்டாம் என்று கூறினார்.

பொதுமக்கள் மத்தியல் அச்சத்தை பரப்புபவர்கள் பொதுமக்களின் உண்மையான பிரதிநிதிகளாக இருக்க முடியாது, மக்கள் அச்சமின்றி வாழ அரசு ஊழியர்கள் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும். எப்போதும் பொதுமக்களுக்கு அச்சமின்றியும் தன்னலமின்றியும் சேவை செய்ய கற்றுக்கொடுத்தவர் நேரு. அவர் தேசத்தை கட்டியெழுப்புவதற்கான ஒவ்வொரு கட்டத்திலும் பொதுமக்களை உச்சமாக வைத்திருந்தார்" என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com