சிறுமியை கடத்தி கட்டாய மதமாற்றம்; தந்தை புகாரில் 7 பேர் கைது

உத்தர பிரதேசத்தில் இந்து மத சிறுமியை கடத்தி சென்று கட்டாய மதமாற்றம் செய்த வழக்கில் 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சிறுமியை கடத்தி கட்டாய மதமாற்றம்; தந்தை புகாரில் 7 பேர் கைது
Published on

லக்னோ,

உத்தர பிரதேசத்தில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அரசு கடந்த நவம்பர் 24ந்தேதி புதிய சட்ட மசோதா ஒன்றுக்கு ஒப்புதல் வழங்கியது.

இதன்படி, உத்தர பிரதேச சட்டவிரோத மதமாற்ற தடை சட்டம் 2020 அமலுக்கு வந்தது. இதன்படி, மதமாற்றம் செய்வது ஜாமீனில் வெளிவர முடியாத குற்றம் என அறிவிக்கப்படுகிறது. இது தவிர குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் வழங்கப்படும்.

இதனை தொடர்ந்து பரேலி நகரில் முதன்முறையாக சிறுமியை கட்டாய மதமாற்றம் செய்வதற்காக நடந்த முயற்சியில் மற்றும் மிரட்டலில் ஈடுபட்ட நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், சீதாப்பூர் மாவட்டத்தில் வசித்து வரும் இந்து சிறுமி ஒருவரின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், குற்றம் சாட்டப்பட்ட நபர் தனது உதவியாளர்களுடன் சேர்ந்து கொண்டு அவரது மகளை கட்டாய மதமாற்றம் செய்துள்ளார் என தெரிவித்து உள்ளார்.

அந்த புகாரில், அவரது மகள் நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றை எடுத்து கொண்டு அந்நபருடன் சென்று விட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த புகாரை பெற்று கொண்ட போலீசார் புதிய மதமாற்ற தடை சட்டத்தின் கீழ் 8 பேர் மீது வழக்கு ஒன்று பதிவு செய்தனர். இதில், 7 பேரை கைது செய்துள்ளனர். தப்பியோடிய முக்கிய குற்றவாளியை பிடிக்க 7 படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com