கடத்தல் வழக்கு: ரேவண்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது சிறப்பு கோர்ட்டு

ரேவண்ணா நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டு உள்ளது. மைசூரு மாவட்டத்தின் கே.ஆர். நகருக்குள் நுழையவோ, சாட்சிகளுடன் பேசவோ கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடத்தல் வழக்கு: ரேவண்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது சிறப்பு கோர்ட்டு
Published on

பெங்களூரு,

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் மற்றும் எச்.டி. ரேவண்ணாவின் மகனான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிரான ஆபாச வீடியோ வழக்கு கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டை விசாரிக்க தனியாக சிறப்பு விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டது. ஆனால், அதே நாளில் ஜெர்மனியின் பிராங்பர்ட் நகருக்கு பிரஜ்வல் தப்பி சென்று விட்டார். அவருக்கு எதிராக 2,976 ஆபாச வீடியோக்கள் பதிவாகி உள்ளன என்று போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில், ஹாசனில் உள்ள ரேவண்ணா வீட்டில் பணியாற்றிய பெண் ஒருவர் அளித்த புகாரில், ஹோலேநரசிப்பூர் தொகுதியின் எம்.எல்.ஏ.வான எச்.டி. ரேவண்ணா 2019 முதல் 2022 வரையிலான 3 ஆண்டுகளில் பல முறை பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார் என குற்றச்சாட்டை கூறி மற்றொரு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த புகாரின் பேரில், 354ஏ, 354டி, 506 மற்றும் 509 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்த பெண்ணின் புகாரை தொடர்ந்து அவரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டு உள்ளன.

பெங்களூரு செசன்ஸ் கோர்ட்டில் முன்ஜாமீன் கோரி எச்.டி. ரேவண்ணா தாக்கல் செய்த மனு தள்ளுபடியானது. இதன்பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். சிறப்பு விசாரணை குழுவின் காவலில் அவர் வைக்கப்பட்டு உள்ளார்.

ரேவண்ணாவின் வீட்டில் பணிபுரிந்த பெண்ணை கடத்திய வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அந்த பெண்ணை, ரேவண்ணாவின் மகனான பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதுபற்றிய வீடியோவும் வைரலாகி உள்ளது. ஆபாச வீடியோ விவகாரம் வெளிவந்ததும், பிரஜ்வலை மதசார்பற்ற ஜனதாதள கட்சி சஸ்பெண்டு செய்தது.

இந்நிலையில், கடத்தல் வழக்கில், மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு கோர்ட்டானது, ரேவண்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டு உள்ளது.

இந்த உத்தரவை நீதிபதி சந்தோஷ் கஜனானா பட் இன்று மாலை பிறப்பித்து இருக்கிறார். ரேவண்ணா சார்பில் மூத்த வழக்கறிஞர் சி.வி. நாகேஷ் ஆஜரானார்.

இதில், ரூ.5 லட்சத்திற்கான பத்திரம் மற்றும் 2 பிணை தொகைக்கான பணமும் செலுத்த வேண்டும் என்ற அடிப்படையில் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. அவர் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மைசூரு மாவட்டத்தின் கே.ஆர். நகருக்குள் நுழையவோ, சாட்சிகளுடன் பேசவோ கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com