

பாட்னா,
பீகார் மாநில முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்டிரீய ஜனதாதள கட்சியின் தலைவருமான லாலுபிரசாத் யாதவுக்கு நேற்று முன்தினம் சிங்கப்பூரில் உள்ள ஆஸ்பத்திரியில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. லாலுவுக்கு அவரது மகள் ரோஹிணி ஆச்சாயா தனது சிறுநீரகத்தை வழங்கினார். அறுவை சிகிச்சைக்கு பின் இருவரும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் லாலுவின் மகனும், பீகார் துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி யாதவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி லாலுவின் உடல் நலம் குறித்து விசாரித்தார். இதனை ராஷ்டிரீய ஜனதாதள கட்சி டுவிட்டரில் தெரிவித்துள்ளது.
மேலும் சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரகத்தின் அதிகாரிகள் தேஜஸ்வி யாதவை நேரில் சந்தித்து லாலு விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்ததாகவும் அந்த டுவிட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளது.