

புதுடெல்லி,
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
தி.மு.க. ஆட்சிக்காலத்தில் நகராட்சித்துறை அமைச்சராக இருந்தவர் கே.என்.நேரு. அப்போது நகராட்சித்துறையில் நடந்த 2,538 பணியிடங்கள் நியமனத்தில் ரூ.634 கோடி லஞ்சப்பணம் கைமாறியுள்ளதாக தமிழ்நாடு டி.ஜி.பி.க்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியது. இந்த கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து கே.என்.நேரு சென்னை ஐகோர்ட்டில் மறுஆய்வு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில், இந்த உத்தரவை பிறப்பிப்பதற்கு முன்பு என்னுடைய தரப்பின் கருத்துகளை ஐகோர்ட்டு கேட்கவில்லை. எனவே, ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனு கடந்த சில நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. அப்போது மனுவை தள்ளுபடி செய்து கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து, ஐகோர்ட்டு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்ய அனுமதி அளித்து, உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து, கே.என்.நேரு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த நிலையில் இந்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, "வழக்கில் தொடர்புடைய கே.என்.நேரு தனது துறைக்கு பொறுப்பாளராக இருந்துள்ளார். முறைகேட்டுக்கு பின்னால் யார் யார் இருக்கிறார்கள் என்பதை கண்டறிவது முக்கியம். எனவே கே.என்.நேரு மீதான குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு செய்வது அவசியமாகிறது" என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும் இந்த விவகாரத்தில் தற்போதைய நிலையில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. கே.என்.நேரு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், கே.என்.நேரு கைது செய்யப்படுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.