கேரள வெள்ளம்: நிவாரண உதவியாக உண்டியல் சேமிப்பையும், காதிலிருந்த கம்மலையும் வழங்கிய சிறுமி

வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு நிவாரண உதவியாக 9 வயது சிறுமி தன்னுடைய உண்டியல் சேமிப்பையும், காதிலிருந்த கம்மலையும் வழங்கியது நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.
கேரள வெள்ளம்: நிவாரண உதவியாக உண்டியல் சேமிப்பையும், காதிலிருந்த கம்மலையும் வழங்கிய சிறுமி
Published on

கேரள மாநிலம் இவ்வாண்டும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட கேரளா மீண்டெழுந்துவருவதற்கு அனைவரும் உதவி செய்ய வேண்டும் என அம்மாநில அரசு கோரிக்கையை விடுத்தது.

இந்நிலையில் சிறுமி ஒருவர் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனிடம் வழங்கிய உதவி அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. முதல்வர் பினராயி விஜயன் எர்ணாகுளம் டவுன் ஹாலில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்ததும் அப்பகுதியை சேர்ந்த லியானா தேஜஸ் என்ற சிறுமி வேகமாக ஓடி சென்று தன்னுடைய உதவியை வழங்கினார். தன்னுடைய உண்டியல் சேமிப்பை நிவாரண உதவிக்கு பயன்படுத்திக்கொள்ளுமாறு வழங்கிய சிறுமி, தன்னுடைய காதிலிருந்த கம்மல்களையும் கழற்றி கொடுத்தார்.

யாரும் எதிர்பாராத நிகழ்வாக சிறுமி தன்னுடைய கம்மல்களை கழற்றி கொடுத்தது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. சிறுமியின் உதவும் குணத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். இதுதொடர்பாக பினராயி விஜயன் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள செய்தியில், மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் எம்.எம். லாரன்ஸின் 90 வது பிறந்தநாளில் கலந்து கொண்டு நான் திரும்பி வரவிருந்தபோது சிறுமி என்னை நோக்கி ஓடிவந்தார். சிறுமி தன்னுடைய உண்டியலில் இருந்த சேமிப்பை என்னிடம் ஒப்படைத்தார். நான் செல்லவிருந்த போது, இதுவும் எனக்கூறி தன்னுடைய காதுகளில் அணிந்திருந்த கம்மல்களை அகற்றி எனக்குக் கொடுத்தார். லியானாவின் இந்த செயலுக்கு எந்தவிதமான பாராட்டுகளும் போதுமானதாக இருக்காது. அவரைப் போன்ற குழந்தைகளைப் பார்ப்பது ஒவ்வொரு நாளும் ஒரு அனுபவம், எங்கள் குழந்தைகள் புதிய கேரளாவின் சொத்துக்கள்,என்று பதிவிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு வெள்ளத்தின் போதும் லியானா தன்னுடைய சேமிப்பை வழங்கினார். அப்போது முதல்வரிடம் நேரடியாக வழங்கவிரும்பினார், ஆனால் அது நடக்கவில்லை. இந்நிலையில் முதல்வர் ஞாயிற்றுக்கிழமை எர்ணாகுளம் வருவதை அறிந்ததும், ஆலுவாவில் இருந்து அங்கு சென்றுள்ளார். சிறுமி ஆலுவாவில் உள்ள செயின்ட் பிரான்சிஸ் உயர்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார். கம்மல்கள் லியானாவுக்கு அவரது தாய் குடும்பத்திலிருந்து பரிசாக வழங்கப்பட்டதாகும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com