

கொல்கத்தா
கால்பந்து நட்சத்திரம் லயோனல் மெஸ்ஸியை காண டிக்கெட் வாங்கிய சுமார் 33 ஆயிரம் ரசிகர்களுக்கு பணத்தை திருப்பி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேற்கு வங்காள முதல்-மந்திரி சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.
கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் 13-ந் தேதி கொல்கத்தாவில் உள்ள யுவ பாரதி மைதானத்தில் மெஸ்ஸி பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் மற்றும் நிர்வாக குளறுபடிகள் காரணமாக நிகழ்ச்சி பாதியிலேயே நிறுத்தப்பட்டது என்று புகார் எழுந்தது. மெஸ்ஸியை காண ரூ.4 ஆயிரம் மற்றும் ரூ.6 ஆயிரம் செலுத்தி டிக்கெட் வாங்கிய ரசிகர்கள், தங்களது பணத்தை திருப்பி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில், தேசிய விளையாட்டு தின நிகழ்ச்சியில் பேசிய சுவேந்து அதிகாரி, சுமார் ரூ.33 ஆயிரம் விளையாட்டு ரசிகர்கள் செலுத்திய பணத்தை திருப்பி வழங்குவதற்கான உள்நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மாநில விளையாட்டு பட்ஜெட்டில் இருந்து இந்த தொகை வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். எனினும், பணத்தை எப்போது முதல் திருப்பி வழங்குவது என்பது குறித்த விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.