

கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் அசானி புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் பேரிடர் மேலாண்மை குழுக்கள் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிர புயலாக உருவெடுத்துள்ள அசானி புயல், மேற்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நிலை கொண்டிருந்தது. இது மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து மே 9 இரவு 11:30 மணியளவில் மேற்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடாவில் மையம் கொண்டது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் ஒடிசா மற்றும் அதனை ஒட்டியுள்ள மேற்கு வங்க கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேற்கு வங்கத்தின் ஹவுரா, கிழக்கு மிட்னாபூர், வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானாஸ் மற்றும் நாடியா மாவட்டங்களில் மே 10 முதல் 12 வரை கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மேற்குவங்காளத்தில் தலைநகர் கொல்கத்தா உள்ளிட்ட பல இடங்களில் நேற்று காலை முதலே இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை வருகிற 13-ந்தேதி வரை நீடிக்கும் என்றும், மீனவர்கள் 15-ந்தேதி வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மாநில வானிலை ஆய்வு மையம் தொவித்துள்ளது. இதன் காரணமாக கடற்கரையோர மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்காக, கொல்கத்தா மாநகராட்சி கார்ப்பரேஷன் ஊழியர்கள் மற்றும் பேரிடர் மேலாண்மை குழுக்களை உஷார் நிலையில் வைத்துள்ளது.கொல்கத்தா மேயர் பிர்ஹாத் ஹக்கிம் கூறுகையில், ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால் நிலைமையை சமாளிக்க சில ஊழியர்களின் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்றார்.
மேற்கு வங்கத்தின் கிழக்கு மிட்னாப்பூரில் உள்ள விவசாயிகள் அசானி புயலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றனர். மாநிலத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால் அறுவடை செய்த பயிர்களை வயலில் இருந்து பாதுகாப்பாக வைக்கும் முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும், அசானி புயல் காரணமாக, மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி மேற்கு மிட்னாபூர் மற்றும் ஜார்கிராமில் தனது மூன்று நாள் நிகழ்ச்சியை ஒத்திவைத்துள்ளார்.
இந்த புயல் தொடர்ந்து வலுவிழக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.