

கொல்கத்தா,
கொல்கத்தாவில் ஏற்பட்ட கட்டிட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவின் தாரதலா பகுதியில் சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்திற்கு சொந்தமான பகுதியில் சேமிப்பு கிடங்கு கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன.
அதன்படி, கடந்த புதன்கிழமை சேமிப்பு கிடங்கு கட்டுமான பணியில் தொழிலாளர்கள் 30க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தொழிலாளர்கள் அனைவரும் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார், மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இதில் 17 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். ஆனால் இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. விபத்தில் ஏற்கனவே 15 பேர் உயிரிழந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் இன்று உயிரிழந்தார். இதனால் கொல்கத்தா கட்டிட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை, கட்டிட விபத்து நடந்த பகுதியில் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.