காங். எம்.எல்.ஏ.-பா.ஜனதா எம்.பி. இடையே கடும் மோதல்

கோலாரில் நடந்த அரசு விழாவில் மந்திரி முன்னிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.- பா.ஜனதா எம்.பி. இடையே கடும் மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
காங். எம்.எல்.ஏ.-பா.ஜனதா எம்.பி. இடையே கடும் மோதல்
Published on

கோலார்

மக்கள் குறைதீர்வு கூட்டம்

கர்நாடகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அந்தந்த மாவட்டங்களில் ஜனதா தரிசனம் எனும் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடத்த வேண்டும் என்று முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவிட்டு இருந்தார்.

அதன்படி நேற்று அனைத்து மாவட்டங்களில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட பொறுப்பு மந்திரிகள் பங்கேற்று மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுத்தனர்.

அதுபோல் கோலார் டவுனில் டி.சன்னய்யா தியட்டரில் நேற்று பொதுமக்கள் குறை தீர்வு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாநில நகர வளர்ச்சித் துறை மந்திரியும், கோலார் மாவட்ட பொறுப்பு மந்திரியுமான பைரதி சுரேஷ் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் கோலார் தொகுதி பா.ஜனதா எம்.பி. முனிசாமி, கோலார் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. நாராயணசாமி மற்றும் மக்கள் பிரதிநிதிகள், பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

எம்.எல்.ஏ.வை அடிக்க பாய்ந்த எம்.பி.

இந்த கூட்டத்தில் முனிசாமி எம்.பி. பேசுகையில், நில ஆக்கிரமிப்பு செய்துள்ளவரை (நாராயணசாமி எம்.எல்.ஏ.வை மறைமுகமாக) மந்திரி அருகில் உட்கார வைத்துள்ளார் என பேசினார்.

உடனே ஆத்திரமடைந்த நாராயணசாமி எம்.எல்.ஏ. எழுந்து, யாரு திருடன்... நீ தான் நில திருடன். யாரிடம் என்ன பேசுகிறாய்... என ஆவேசமாக கூறினார்.

இதனால் கோபமடைந்த முனிசாமி எம்.பி., நாராயணசாமி எம்.எல்.ஏ.வை அடிக்க செல்வது போல் பாய்ந்தார். இதனால் மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் கடும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. உடனே முனிசாமி எம்.பி.யை அருகில் இருந்த போலீசார் பிடித்து இழுத்து சென்று சமாதானப்படுத்தினர்.

பரபரப்பு

இதுகுறித்து முனிசாமி எம்.பி. கூறுகையில், நில அபகரிப்பு செய்தவர்களை அருகில் உட்கார வைத்துக்கொண்டு மக்கள் குறைகேட்பு கூட்டம் நடத்துவீர்களா என மந்திரியிடம் கேட்டேன். நான் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை என்று தெரிவித்தார்.

இந்த விவகாரத்தை தொடர்ந்து சிறிது நேரம் நிகழ்ச்சி தடை பட்டது. பின்னர் மந்திரி தலைமையில் பொதுமக்கள் குறை தீர்வு கூட்டம் சுமுகமாக நடைபெற்றது.

ஏற்கனவே எம்.எல்.ஏ., எம்.பி. இடையே நில  ஆக்கிரமிப்பு தொடர்பாக பிரச்சினை நீடித்து  வரும் நிலையில் மந்திரி முன்னிலையில் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com