

திருவனந்தபுரம்,
கேரளம் மாநிலத்தில் சமீபகாலமாக மக்கள் பல்வேறு நோய் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இதில் தற்போது நிபா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது.
கோழிக்கோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இந்த தொற்றின் தாக்கம் அதிகரித்து காணப்பட அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதில் நோய் தொற்று சந்தேகம் ஏற்பட்டவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
மாநிலத்தில் 4 பேர் மிக அதிக ஆபத்துள்ள நிலையிலும் 14 பேர் ஆபத்துள்ள தொடர்பாளர்களாகவும் வகைப்படுத்துள்ளனர். இதற்கிடையில் கோழிகோடு மருத்துவ கல்லூரி மருத்துவனையில் சிகிச்சை பெற்று வரும் 43 வயது நபரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. மாநிலத்தில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு டெல்லியில் இருந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் குழு கேரளம் விரைந்துள்ளது. இந்த குழுவினர் கோழிக்கோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சென்று அங்கு செயல்படுத்தப்பட்டு வரும் சிகிச்சை மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தது.
இந்த குழு கட்டுப்பாட்டு அறையை சேர்ந்த சுகாதார பணியாளர்கள், புதிதாக அடையாளம் காணப்பட்ட 13 பேர் உள்பட தற்போது தொடர்பு பட்டியலில் உள்ள 100 பேரையும் பரிசோதனைக்கு உட்படுத்தி உள்ளது. நோய் பரவலை கட்டுப்படுத்தவும் கண்காணிப்பில் உள்ளவர்களை கண்காணிக்கவும் மருத்துவகுழு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதுதொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், வவ்வால் மூலமாக 'நிபா' வைரஸ் தொற்று ஏற்படுகிறது. இந்த பாதிப்புக்கு உள்ளாகும் மனிதர்களிடம் தொடர்புடையவர்கள் மூலம் அடுத்தடுத்து தொற்று பாதிப்பு உருவாகும்.
எனவே பாதிப்புக்கு ஆளானவர்கள் தனிமைப்படுத்தி உரிய சிகிச்சை அளித்தாலே பரவலை தடுத்து நிறுத்தலாம் என்றார்.