

மங்களூரு,
கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும், பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் சித்தார்த். சிக்கமகளூருவை சேர்ந்த தொழில் அதிபரான இவர் உலகம் முழுவதும் காபி டே எனும் பிரபலமான தேநீர் ஓட்டலும், ஏராளமான நிறுவனங்களும் நடத்திவந்தார்.
எஸ்.எம்.கிருஷ்ணா காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்த சில நாட்களிலேயே சித்தார்த்துக்கு சொந்தமான நிறுவனங்கள், காபி டே ஆகியவற்றில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சித்தார்த் தனது காரில் பெங்களூருவில் இருந்து சிக்கமகளூருவுக்கு சென்றார். காரை டிரைவர் பசவராஜ் ஓட்டினார். சக்லேஷ்புரா அருகே சென்றபோது டிரைவரிடம், மங்களூருவுக்கு செல்லும்படி சித்தார்த் கூறினார். அதன்படி டிரைவர் காரை மங்களூருவுக்கு ஓட்டிச் சென்றார்.
இரவு 7.15 மணிக்கு மங்களூரு அருகே நேத்ராவதி ஆற்றுப்பாலத்தில் கார் சென்றபோது காரை நிறுத்தும்படி கூறினார். காரில் இருந்து இறங்கிய சித்தார்த் தனது செல்போனில் பேசியபடி நடந்து சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் காருக்கு திரும்பிவரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் பசவராஜ், சித்தார்த்தின் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் பசவராஜ், சித்தார்த் மாயமாகிவிட்டதாக கூறி கங்கனாடி டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போலீஸ் கமிஷனர் அனுமந்தராயா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர்.
சித்தார்த் ஆற்றில் குதித்து இருக்கலாம் என்று தீயணைப்பு வீரர்கள், மீனவர்கள் உதவியுடன் நேத்ராவதி ஆற்றில் போலீசார் தேடிப்பார்த்தனர். இரவு முழுவதும் தேடியும் சித்தார்த் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதற்கிடையே சித்தார்த் மாயமான விஷயம் கர்நாடகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்பது தெரியவில்லை. இதுபற்றி அறிந்த எஸ்.எம்.கிருஷ்ணாவும், அவருடைய குடும்பத்தினரும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.
இதற்கிடையே நேற்று காலை மீண்டும் தீயணைப்பு வீரர்கள், பேரிடர் மீட்பு குழுவினர், ஊர்க்காவல் படையினர், கடலோர காவல் படையினர், மீனவர்கள் ஆகியோர் சித்தார்த்தை நேத்ராவதி ஆற்றில் தேடும் பணியில் ஈடுபட்டனர். சித்தார்த்தை யாராவது கடத்திச்சென்று இருக்கலாமோ என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
சித்தார்த்தின் கார் டிரைவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தட்சிண கன்னடா மாவட்ட கலெக்டர் சசிகாந்த் செந்தில் கூறும்போது, சித்தார்த் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டாரா? என்பது தெரியவில்லை. 8 படகுகள், 2 கடலோர காவல்படைக்கு சொந்தமான கப்பல்கள், ஹெலிகாப்டர் ஆகியவற்றின் உதவியுடன் சித்தார்த்தை தேடும் பணி நடந்து வருகிறது என்றார்.
இதுபற்றி அறிந்ததும் முன்னாள் பிரதமர் தேவேகவுடா, முதல்-மந்திரி எடியூரப்பா, முன்னாள் முதல்-மந்திரிகள் குமாரசாமி, சித்தராமையா, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர், தொழில் அதிபர்கள் என ஏராளமானோர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் வீட்டிற்கு சென்று அவருக்கு ஆறுதல் கூறினார்கள்.
"வருமான வரித்துறையினர் எனக்கு தொந்தரவு கொடுத்தனர்" - சித்தார்த் எழுதியதாக வைரலாகும் கடிதம்
தொழில் அதிபர் சித்தார்த் எழுதியதாக சமூக வலைத்தளத்தில் ஒரு கடிதம் வைரலாகி வருகிறது. அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
37 வருட கடின உழைப்புக்கு பிறகு எனது நிறுவனத்தில் 30 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்துள்ளேன். தொழில்நுட்ப நிறுவனங்களில் 20 ஆயிரம் பேர் பணியாற்றி வருகிறார்கள். ஆனாலும் எனது தொழிலை லாபநோக்கத்தில் கொண்டுசெல்வதில் நான் தோல்வி அடைந்துவிட்டேன். இதற்காக என் மேல் நம்பிக்கை வைத்தவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
நான் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அதிகளவில் கடன் வாங்கி இருந்தேன். கடன் கொடுத்தவர்கள் எனக்கு தொல்லை கொடுத்தனர். வருமான வரித்துறையினர் எனக்கு தொந்தரவு கொடுத்தனர். முன்னாள் டி.ஜி. எனது சொத்துகளை முடக்கினார். இதனால் எனக்கு பண நெருக்கடி ஏற்பட்டது.
எனக்கு பின்னர் நான் விட்டுச்செல்லும் தொழிலை வெற்றிகரமாக நடத்துங்கள். எல்லா தவறுக்கும் நான் ஒருவன் தான் காரணம். என்னுடைய ஆடிட்டர், மூத்த அதிகாரிகள் நான் செய்த பணபரிவர்த்தனை பற்றி அறிந்துகொள்ளவில்லை. யாரையும் ஏமாற்ற வேண்டும், தவறான பாதைக்கு அழைத்து செல்ல வேண்டும் என்பது எனது நோக்கம் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சொத்து மதிப்பு ரூ.24 ஆயிரம் கோடி
தொழில் அதிபர் சித்தார்த் 24 வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்களில் இருந்து ரூ.8 ஆயிரம் கோடி கடன் பெற்றிருக்கிறார் என்று கூறப்படுகிறது. ஆனால் சித்தார்த்தின் சொத்து மதிப்பு ரூ.24 ஆயிரம் கோடி இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதாவது அவரது கடனைவிட 3 மடங்கு அதிகம் சொத்து உள்ளது.
சித்தார்த் தனது கடன் பிரச்சினை, மனவேதனை, கடன் கொடுத்தவர்களின் தொந்தரவுகள் குறித்து தனது நெருங்கிய நண்பர்களிடம் மட்டும் சொல்லி வருத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. உலகம் முழுவதும் கிளைகளை கொண்டுள்ள தனக்கு சொந்தமான 12 ஆயிரம் ஏக்கர் காபி எஸ்டேட் மூலம் 2015-ம் ஆண்டு ரூ.8,200 கோடி லாபம் ஈட்டி இருந்தார். அதனால் அந்த ஆண்டு போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட மிகச்சிறந்த தொழில் அதிபர்களின் பட்டியலில் அவர் சிறப்பிடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.