

பெங்களூரு,
கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணை அமைந்துள்ளது. கர்நாடகம், தமிழ்நாடு மக்களின் உயிர்நாடியாக இந்த அணை விளங்குகிறது. இந்த அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் தான் காவிரி ஆற்றில் பாய்ந்தோடி தமிழகத்துக்கு செல்கிறது.
இங்கிருந்து தான் பெங்களூரு, மைசூரு, மண்டியா நகரங்களுக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் தற்போது கே.ஆர்.எஸ். அணையில் நீர்மட்டம் அதலபாதாளத்துக்கு சென்றுள்ளது.
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கினாலும், கே.ஆர்.எஸ். அணையின் நீர்பிடிப்பு பகுதியான குடகில் இன்னும் போதிய அளவு மழை பெய்யாததால் நீர்வரத்து இல்லாமல் உள்ளது. இதனால் அந்த அணையை நம்பி உள்ள பெங்களூரு, மைசூரு, மண்டியா நகரங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது.
124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் நேற்று காலை 81 அடியாக இருந்தது. அதாவது 49.452 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) கொள்ளளவு கொண்ட அணையில் தற்போது 11.394 டி.எம்.சி.யே தண்ணீர் உள்ளது.
கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 81 அடியாக சரிந்துள்ளதால் கவலைக்குரிய சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு (2025) இதே காலகட்டத்தில் அணையின் நீர்மட்டம் 108 அடியாக இருந்தது. ஆனால் இம்முறை தென்மேற்கு பருவமழை தொடங்கினாலும் போதிய மழையின்மையால், அணை கிட்டத்தட்ட வறண்டுபோகும் நிலையை எட்டியுள்ளது.
தற்போது கே.ஆர்.எஸ். அணையில் 11.394 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே உள்ளது. இதில் 5 டி.எம்.சி. நீர் ‘டெட் ஸ்டோரேஜ்' (பயன்படுத்த முடியாத அடிமட்ட நீர் இருப்பு) நிலையில் உள்ளதால், 6 டி.எம்.சி. நீர் மட்டுமே கிடைக்கும். அதே நேரத்தில் காவிரி நீர் பங்கீட்டு ஒப்பந்தப்படி இந்த மாதம் (ஜூன்) தமிழகத்துக்கு 9.19 டி.எம்.சி. தண்ணீர் திறக்க வேண்டும்.
ஆனால் தற்போது கே.ஆர்.எஸ். அணையில் பயன்பாட்டிற்கு 6 டி.எம்.சி. நீர் மட்டுமே உள்ளது. இதனால் தண்ணீர் திறப்பதில் சிக்கல் எழுந்துள்ளதால் தமிழகத்தில் நீர் பற்றாக்குறை மேலும் மோசமடையக்கூடும் என்றும், இரு மாநிலங்களுக்கு இடையிலான காவிரி நதிநீர் விவகாரம் மீண்டும் பூதாகரமாக வெடிக்க வாய்ப்புள்ளதாகவும் அச்சம் நிலவுகிறது.
கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் மிக குறைந்த அளவை எட்டி வருவதால், வரும் நாட்களில் முக்கிய நகரங்கள் பெரும் சிக்கல்களைச் சந்திக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தலைநகர் பெங்களூருவின் முக்கிய குடிநீர் ஆதாரமாக கே.ஆர்.எஸ். அணை விளங்குவதால், இதே நிலைமை நீடித்தால் பெங்களூரு நிச்சயம் குடிநீர் தட்டுப்பாட்டைச் சந்திக்கும் என்று கூறப்படுகிறது.