கர்நாடகா: பாஜக எம்எல்ஏ ரேணுகாச்சார்யாவின் அண்ணன் மகன் காரில் சடலமாக கண்டெடுப்பு

காணாமல் போன கர்நாடகா பாஜக எம்எல்ஏ ரேணுகாச்சார்யாவின் அண்ணன் மகன் காரில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
Published on

ஒன்னாளி,

தாவணகெரே மாவட்டம் ஒன்னாளி தொகுதி பாஜக எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ரேணுகாச்சார்யா. இவர், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் அரசியல் செயலாளராகவும் உள்ளார். இவரது அண்ணன் ரமேசின் மகன் சந்திரசேகர் (வயது 27). கடந்த 30-ந்தேதி காலை சந்திரசேகர் தனது வீட்டில் இருந்து காரில் வெளியே சென்றுள்ளார். ஆனால் அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை தேடும்பணியில் ஈடுபட்டனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுபற்றி ஒன்னாளி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன சந்திரசேகரை தேடிவந்தனர்.

இந்த நிலையில் ஒன்னாளியில் உள்ள கால்வாய் ஒன்றில் சந்திரசேகர் அவரது காரில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். சந்திரசேகரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக தாவங்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதாக காவல் கண்காணிப்பாளர் சிபி ரிஷ்யந்த் தெரிவித்தார்.

இதுகுறித்து ஒன்னாளியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காரில் சந்திரசேகர் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்படும். தடயவியல் மற்றும் நிபுணர்கள் குழு சம்பவ இடத்தில் ஆய்வு செய்து வருகின்றனர் என்று கூறினார்.

இதுகுறித்து கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை கூறும்போது, இது எனக்கு அதிர்ச்சியாக உள்ளது. இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும். ஏற்கெனவே எஸ்பி விசாரணையை தொடங்கியுள்ளார் என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com