

பெங்களூரு,
முதல்-மந்திரி குமாரசாமி பதவி விலக கோரி பா.ஜனதா கடும் அமளியில் ஈடுபட்டதால், கர்நாடக சட்டசபை நாள் முழுவதும் முடங்கியது. இன்று (வெள்ளிக்கிழமை) முதல்-மந்திரி குமாரசாமி கர்நாடக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
கர்நாடகத்தில் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. பதவி கிடைக்காத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் காங்கிரசுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நடந்த கர்நாடக சட்டசபையின் முதல் நாள் கூட்டத்தில் கவர்னர் வஜூபாய் வாலா பேசும்போது, பா.ஜனதாவினர் அமளியில் ஈடுபட்டதால், கவர்னர் தனது உரையை பாதியிலேயே முடித்துக்கொண்டு சென்றார். அதன்பிறகு சபை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் கர்நாடக சட்டசபையின் 2-வது நாள் கூட்டம் நேற்று காலை 11.40 மணிக்கு கூடியது. கூட்டம் தொடங்கியதும் பா.ஜனதா உறுப்பினர்கள் சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்றும், முதல்-மந்திரி குமாரசாமி பதவி விலக வேண்டும், என்றும் அவர்கள் வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபையை 10 நிமிடம் ஒத்திவைப்பதாக சபாநாயகர் ரமேஷ்குமார் அறிவித்தார்.
சபை மீண்டும் கூடியபோதும், பா.ஜனதா உறுப்பினர்கள் தங்களின் தர்ணா போராட்டத்தை தொடர்ந்தனர். அப்போது பதிலுக்கு காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் உறுப்பினர்கள் பா.ஜனதாவை கண்டித்து முழக்கமிட்டனர்.இதனால் சபையில் கூச்சல்-குழப்பம் உண்டாகி கடும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து சபாநாயகர், சபையை நாள் முழுவதும் ஒத்திவைத்தார்.
இந்த அமளிக்கு இடையே சபையில் கவர்னரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. கர்நாடக சட்டசபையின் 3-வது நாள் கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. அப்போது நிதித்துறையை தன்வசம் வைத்துள்ள முதல்-மந்திரி குமாரசாமி, 2019-20-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) தாக்கல் செய்கிறார்.