

பிரயாக்ராஜ்,
உத்தரபிரதேச மாநிலத்தில் பிரயாக்ராஜ் நகர் என்ற பெயரால் தற்போது அழைக்கப்படுகிற அலகாபாத்தில், கடந்த 15-ந் தேதி கும்பமேளா கோலாகலமாக தொடங்கியது. முதல் நாளில் மட்டும் 1 கோடியே 40 லட்சம் பேர் அங்கு குவிந்து, புனித நீராடினர்.
ஒவ்வொரு நாளிலும் லட்சக்கணக்கானோர் வந்து குவிந்தவண்ணம் உள்ளனர். இந்த கும்பமேளாவுக்காக உத்தரபிரதேச மாநிலத்தை ஆளும் பாரதீய ஜனதா கட்சி அரசு ரூ.4 ஆயிரத்து 200 கோடி ஒதுக்கி சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
கும்பமேளா நடைபெறும் இடத்தின் பரப்பளவு முன்பு 1,600 ஹெக்டேராக இருந்தது. தற்போது அது இரு மடங்காக (3 ஆயிரத்து 200 ஹெக்டேர்) அதிகரிக்கப்பட்டுள்ளது. கும்பமேளாவுக்கு குவிகிற கோடிக்கணக்கான பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக 4 ஆயிரம் கூடாரங்களுடன் ஒரு சிறிய நகரமே உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக புதிய சாலைகள், பாலங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த கும்பமேளாவின்போது மொத்தம் 12 கோடி மக்கள் வந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மார்ச் மாதம் 4-ந் தேதிதான் கும்பமேளா நிறைவு பெறுகிறது.
அதுவரை பிரயாக்ராஜ் நகரில் ஒவ்வொரு நாளும் திருவிழாக்கோலம்தான். நாடு முழுவதும் இருந்தும் பக்தர்களும், சாமியார்களும் திரள்கின்றனர். அவர்கள் ஆடல், பாடல்களுடன் ஊர்வலமாக திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். கொட்டும் பனிக்கு மத்தியிலும் அவர்களின் உற்சாகம் குறையவே இல்லை.
கும்பமேளா, ஆன்மிக, மத ரீதியிலான விழா என்றபோதும், உத்தரபிரதேச மாநிலத்தில் நடப்பு நிதி ஆண்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு இது மிகப்பெரிய பங்களிப்பை செய்யப்போகிறது.
பல்வேறு துறைகளில் சுமார் 6 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை அளிக்கப்போகிறது என்று இந்திய தொழிற்சம்மேளனம் (சிஐஐ) ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அந்த வகையில் ஓட்டல் துறையில் 2 லட்சம் பேருக்கும், விமான நிறுவனங்கள், விமான நிலையங்கள் மூலம் 1 லட்சம் பேருக்கும், சுற்றுலா நிறுவனங்களில் சுமார் 45 ஆயிரம் பேருக்கும் வேலை வாய்ப்பினை இந்த கும்பமேளா உருவாக்கித்தருவதாக தகவல்கள் கூறுகின்றன. மருத்துவ சுற்றுலா, சுற்றுலா சார்பு துறைகளில் சுமார் 85 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை அளிக்கும். இதெல்லாம் தவிர்த்து அமைப்பு சாராத (வழிகாட்டிகள், வாடகைக் கார் டிரைவர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் உள்ளிட்டவை) துறையில் 55 ஆயிரம் பேருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்கிறார்கள்.
இது ஒரு புறம் இருக்க மாநில அரசுக்கு பல்வேறு வழிகளில் வருமானம் கொட்டப்போகிறது.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா, மலேசியா, சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, மொரீசியஸ், ஜிம்பாப்வே, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து பெருந்திரளான எண்ணிக்கையில் சுற்றுலாப்பயணிகள் வருகை தருவர் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதன்படி ஒவ்வொரு நாளும் அவர்கள் வந்து குவிந்தபடி உள்ளனர்.
இந்த கும்பமேளா, உத்தரபிரதேச மாநில அரசுக்கு சுமார் ரூ.1 லட்சம் கோடி வருவாயை குவிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த கும்பமேளாவால், உத்தரபிரதேசத்தின் அண்டை மாநிலங்களான ராஜஸ்தான், உத்தரகாண்ட், பஞ்சாப், இமாசலபிரதேசம் ஆகியவையும் நல்ல பலன் அடையும். கும்பமேளாவுக்கு வருகிற உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் அந்த மாநிலங்களுக்கும் செல்வார்கள். அங்குள்ள சுற்றுலாதலங்களை பார்வையிடுவார்கள். இதனால் அந்த மாநிலங்களுக்கு வருவாய் கிடைக்கும்.
இந்த கும்பமேளாவையொட்டி உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையில் மந்திரிகள் அனைவரும் வரும் 29-ந் தேதி திரிவேணி சங்கமத்தில் புனித நீராட உள்ளனர்.
அதே நாளில் பிரயாக்ராஜ் நகரில் மாநில மந்திரிசபை கூட்டத்தையும் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
இதை பிரயாக்ராஜ் நகரில் முகாமிட்டுள்ள துணை முதல்-மந்திரி கேசவ் பிரசாத் மவுரியா நிருபர்களிடம் தெரிவித்தார்.
மாநிலத்தின் தலைநகரான லக்னோவுக்கு வெளியே மந்திரிசபை கூட்டம் நடக்கப்போவது இதுவே முதல் முறை ஆகும்.