கொரோனா வைரசுக்கு எதிராக கும்பமேளா அடையாளப் பங்கேற்பாக மட்டும் இருக்க வேண்டும் -பிரதமர் மோடி வேண்டுகோள்

கும்பமேளா திருவிழா கொரோனா வைரசுக்கு எதிராக இந்த நாடு நடத்தும் போரின் அடையாளப் பங்கேற்பாக இருக்க வேண்டும், என்று, பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
Image courtesy : PTI
Image courtesy : PTI
Published on

புதுடெல்லி

உத்தரகாண்டின் ஹரித்வாரில் நடைபெற்றுவரும் கும்ப மேளா திருவிழா, கொரோனா பரப்பும் மையமாக மாறி வருகிறது. 670 ஹெக்டேர் பரப்பளவில் விரிந்து கிடக்கும் கும்ப மேளா தலங்களில் லட்சக்கணக்கில் குவியும் பக்தர்களால் கொரோனா தடுப்பு விதிமுறைகள் அனைத்தும் காற்றில் பறந்து விட்டன.

புனித நீராடலுக்கு உகந்த முக்கிய நாட்களான சோமவதி அமாவாசை (ஏப்ரல் 12-ந்தேதி), மேஷ் சங்கராந்தி (நேற்று முன்தினம்) ஆகிய 2 நாட்களில் மட்டும் சாமியார்கள், சாதுக்கள், பக்தர்கள் என 48 லட்சத்துக்கு அதிகமானோர் புனித நீராடியுள்ளனர். எந்தவித விழிப்புணர்வோ, தொற்று குறித்த அச்சமோ இன்றி புனித நீராடுவதால் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்த கட்டுக்கடங்காத கூட்டத்தில் மக்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றுவதை உறுதி செய்ய பாதுகாப்பு படையினராலும் முடியவில்லை. அத்துடன் பெரும்பாலான சாமியார்கள் மற்றும் சாதுக்கள், கொரோனா பரிசோதனைக்கும் மறுப்பு தெரிவித்தனர்.

கும்பமேளாவுக்கு வந்தவர்களிடையே நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் முதல் கட்டமாக 2,171 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கொரோனாவால் மத்தியப் பிரதேச மகா நிர்வானி அகாராவின் தலைவர் சுவாமி கபில் தேவ் கடந்த 13ம் தேதி உயிரிழந்தார்.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ஒரு டுவீட்டில், ஜுனா அகாராவின் சுவாமி அவ்தேஷானந்த் கிரியிடம் தொலைபேசியில் பேசியதாகவும், இரண்டு ஷாஹி ஸ்னான்" (புனித குளியல்) நடந்திருப்பதாகவும், இந்த ஆண்டு கும்பமேளா நாடு நடத்தும் கொரோனாவுக்கு எதிரான போரின் அடையாளமாக இருக்க வேண்டும் என்றும் நான் வேண்டுகோள் விடுத்தேன்." என்று பிரதமர் மோடி இந்தியில் டுவீட் செய்துள்ளார்.

அதாவது அடையாளம் என்ற வகையில் மட்டும் கும்பமேளாவை கொண்டாடுங்கள் என்பது மோடி கோரிக்கையாகும். பிரதமர் மோடியின் டுவீட்டுக்கு பதிலளித்த சுவாமி அவ்தேஷானந்த்: "பிரதமர் மோடியின் வேண்டுகோளை நாங்கள் மதிக்கிறோம். உயிர்களைக் காப்பாற்றுவது புனிதமானது.

அனைத்து கொரோனா நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என்று சாதுக்களை நான் கேட்டுக்கொள்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.

'நிரஞ்சனி அகாடா' என்ற அமைப்பு, கும்ப மேளாவை இன்றுடன் முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளது. இதனால், கும்பமேளா இன்றுடன் முடித்துக் கொள்ளப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com