

புதுடெல்லி,
உத்தரபிரதேச மாநிலத்தில், கோரக்பூரில் இருந்து 53 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது குஷிநகர். இது புத்த மதத்தினரின் புனிதத்தலம் ஆகும். இங்குதான் புத்தர் பிரான் தனது 80-வது வயதில் படுத்த கோலத்தில் மகாபரிநிர்வாணம் (பிறவா நிலை) அடைந்தார்.
அங்கு அதன் நினைவாக மகாபரிநிர்வாண கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோவிலில், புத்தர் மகாபரிநிர்வாணம் அடைந்த காட்சியை சிற்பமாக செதுக்கி வைத்துள்ளனர். இந்த நகரை, உலகெங்கும் உள்ள புத்த மத யாத்திரை தலங்களுடன் இணைக்கிற விதத்தில் சர்வதேச விமான நிலையம், ரூ.260 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சர்வதேச விமான நிலையத்தால், ஜப்பான், தென்கொரியா, இலங்கை, தாய்லாந்து, வியட்னாம், கம்போடியா, தைவான் போன்ற புத்த மதத்தை பெரும்பான்மையோரால் பின்பற்றுகிற நாடுகளில இருந்து புனிதப்பயணிகள் இங்கு வர வாய்ப்பு உருவாகி உள்ளது. இங்கு வந்து, புத்தர் மகாபரிநிர்வாணம் அடைந்த தலத்தை தரிசிக்கிற வாய்ப்பும் புத்த மதத்தினருக்கு கிடைக்கிறது.
இந்த சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி இன்று (புதன்கிழமை) திறந்து வைக்கிறார். இதன் அடையாளமாக, முதல் விமானமாக இலங்கை தலைநகரான கொழும்பு நகரில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் இங்கு இன்று வந்தடைகிறது.
இந்த விமானத்தில் 100-க் கும் மேற்பட்ட புத்த துறவிகளும், பிரமுகர்களும் வருகிறார்கள். குறிப்பாக, இலங்கை பிரதமர் மகிந்தா ராஜபக்சேயின் மகனும், விளையாட்டு மற்றும் இளைஞர்கள் விவகாரத் துறை மந்திரியுமான நாமல் ராஜபக்சே தலைமையில் 5 மந்திரிகள் குழுவும் வருகிறது.
இந்த விமானத்தில் புத்தர் நினைவுச்சின்னங்களுக்கென ஒரு இருக்கை பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நினைவுச்சின்னங்களை இலங்கையின் வாஸ்கதுவா கோவில் மகாநாயகா தலைமையிலான 12 உறுப்பினர்கள் புனித நினைவுச்சின்ன குழு கொண்டு வருகிறது.
புத்தர் நினைவுச்சின்னங்களை உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பெற்றுக்கொள்கிறார்.
குஷிநகரின் மகாபரிநிர்வாண கோவிலில் அபிதம்ம தின விழாவிலும் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். (அபிதம்ம தினம் என்பது, புத்தர் தனது தாயாருக்கு அபிதம்மத்தை போதித்து விட்டு பூமிக்கு திரும்பிய நாள் ஆகும்.)
புத்தர் நினைவுச்சின்னங்களுக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்துகிறார். மோடியுடன் இந்த நிகழ்ச்சியில் இலங்கை, தாய்லாந்து, மியான்மர், தென்கொரியா, நேபாளம், பூடான், கம்போடியா ஆகிய நாடுகளில் இருந்து வருகிற புகழ்பெற்ற புத்த மத துறவிகளும், பல்வேறு நாடுகளின் தூதர்களும் கலந்துகொள்கிறார்கள்.
இங்கு அவர் போதிமரக்கன்றினையும் நடுகிறார். விழாக்கோலம் பூண்டுள்ள குஷிநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.