மூடநம்பிக்கையின் உச்சம்: மாந்திரீகத்தில் ஈடுபடுவதாக கூறி இளம்பெண்ணை 2 மாத கைக்குழந்தையுடன் எரித்துக்கொன்ற கிராமத்தினர்

ஜோதி சிங்கு செய்த மாந்திரீகத்தால் நபர் உயிரிழந்துவிட்டதாக குற்றஞ்சாட்டினர்.
மூடநம்பிக்கையின் உச்சம்: மாந்திரீகத்தில் ஈடுபடுவதாக கூறி இளம்பெண்ணை 2 மாத கைக்குழந்தையுடன் எரித்துக்கொன்ற கிராமத்தினர்
Published on

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பம் மாவட்டம் சாய்பசா கிராமத்தை சேர்ந்தவர் கொல்ஹன் சிங்கு (வயது 40). இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி ஜனி சிங்கு. 2வது மனைவி ஜோதி சிங்கு (வயது 32). ஜோதி சிங்குவுக்கு 2 வயதில் மகனும், 2 மாத ஆண் குழந்தையும் இருந்தனர்.

இதனிடையே, ஜோதி சிங்கு மாந்திரீக செயலில் ஈடுபடுவதாக கிராமத்தினர் குற்றஞ்சாட்டி வந்தனர்.

இந்நிலையில், கொல்ஹன் சிங்கு வீட்டிற்கு கடந்த 17ம் தேதி இரவு கிராமத்தினர் 10க்கும் மேற்பட்டோர் வந்துள்ளனர். அப்போது, ஜோதி சிங்கு மாந்திரீகத்தில் ஈடுபடுவதாக கூறி கொல்ஹன் சிங்குவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், ஜோதி சிங்கு செய்த மாந்திரீகத்தால் நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த நபர் உயிரிழந்துவிட்டதாக குற்றஞ்சாட்டினர்.

அப்போது கிராமத்தினருக்கும் கொல்ஹன் சிங்குவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கிராமத்தை சேர்ந்த சிலர் தாங்கள் கொண்டுவந்த பெட்ரோலை ஜோதி சிங்கு மீதும் அவரது 2 மாத குழந்தை மீதும் ஊற்றி தீ வைத்து கொளுத்தினர். இந்த கொடூர சம்பவத்தில் ஜோதி சிங்கும் அவரது 2 மாத குழந்தையும் தீயில் கருகி உயிரிழந்தனர்.

கொல்ஹன் சிங்கு மீதும் தீ வைக்கப்பட்ட நிலையில் அவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பி கிராமத்தை விட்டு ஓடியுள்ளார். பின்னர், இது குறித்து போலீஸ் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றுள்ளார். இரவு போலீஸ் நிலையம் பூட்டப்பட்டுள்ளது. இதனால் இரவு முழுவதும் அங்கேயே தங்கியுள்ளார். பின்னர், அதிகாலை போலீஸ் நிலையம் திறக்கப்பட்ட உடன் நடந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், தீக்காயங்களுடன் இருந்த கொல்ஹன் சிங்குவை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்துவிட்டு சாய்பசா கிராமத்திற்கு சென்றனர். அங்கு கொல்ஹன் சிங்கின் வீட்டிற்கு வெளியே ஜோதி சிங்குவும் அவரது 2 மாத குழந்தையும் தீ வைத்து எரித்துக்கொல்லப்பட்ட நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர், இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக கிராமத்தினர் 4 பேரை கைது செய்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மூடநம்பிக்கையின் உச்சமாக மாந்திரீகத்தில் ஈடுபடுவதாக கூறி இளம்பெண்ணை 2 மாத கைக்குழந்தையுடன் கிராமத்தினரே தீவைத்து எரித்துக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com