லடாக் வன்முறை; சோனம் வாங்சுக் கைது - மல்லிகார்ஜுன கார்கே கண்டனம்

லடாக் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை பா.ஜ.க. கைவிட்டுள்ளது என மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.
லடாக் வன்முறை; சோனம் வாங்சுக் கைது - மல்லிகார்ஜுன கார்கே கண்டனம்
Published on

புதுடெல்லி,

லடாக் மக்களின் கோரிக்கைகளை கேட்பதற்கு பதிலாக பா.ஜ.க. அரசு வன்முறையால் பதிலளித்துள்ளது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

லடாக்கில் நிலவும் வன்முறை சூழலை அரசாங்கம் மோசமாக கையாண்டதையும், அதைத் தொடர்ந்து தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டதையும் இந்திய தேசிய காங்கிரஸ் வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த நெருக்கடி நிலைக்கு லடாக் மக்களின் நலன்களை பா.ஜ.க. அரசு விட்டுக் கொடுத்ததே காரணம்.

அங்கு ஒரு வருடத்திற்கும் மேலாக கொந்தளிப்பு நிலவுகிறது. அரசியலமைப்பின் 6-வது அட்டவணையின் கீழ் சேர்க்கப்பட வேண்டும் என்ற லடாக் மக்களின் கோரிக்கையை பொறுமையாக கேட்பதற்கு பதிலாக, பா.ஜ.க. அரசு வன்முறையால் பதிலளிக்கிறது. லடாக்கிற்கு 6-வது அட்டவணை அந்தஸ்தை வழங்குவதாக பா.ஜ.க. உறுதியளித்திருந்தது. துரதிர்ஷ்டவசமாக அந்த வாக்குறுதி முற்றிலும் கைவிடப்பட்டுள்ளது.

இந்திய தேசிய காங்கிரஸ் லடாக்கில் அமைதியைத் தவிர வேறு எதையும் விரும்பவில்லை. பல தசாப்தங்களாக, இந்த அழகான எல்லைப் பகுதி இணக்கமாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதிசெய்து, ஜனநாயகத்தின் உணர்வையும், தேசிய பாதுகாப்பின் நோக்கத்தையும் காங்கிரஸ் நிலைநிறுத்தி வந்தது.

நான்கு அப்பாவி இளைஞர்களின் மரணம் மற்றும் பலருக்கு ஏற்பட்ட கடுமையான காயங்கள் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். லடாக்கில் ஜனநாயகம் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு மீட்டெடுக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com