

விவசாயிகள் கார் ஏற்றிக்கொல்லப்பட்ட சம்பவத்தில் அரசியல் ஆதாயம் தேட காங்கிரஸ் முயற்சி - பா.ஜனதா குற்றச்சாட்டு
புதுடெல்லி,
பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
விவசாயிகள் கொல்லப்பட்ட விவகாரத்தில், விவசாய தலைவர்களும், உள்ளூர் நிர்வாகமும் தீர்வு காண முயன்று வருகின்றனர். பாரபட்சமற்ற விசாரணை நடந்து வருகிறது.
ஆனால், மக்களை தூண்டிவிட்டு வன்முறையை உண்டாக்க காங்கிரஸ் முயன்று வருகிறது. அரசியல் ஆதாயம் தேட இப்பிரச்சினையை பயன்படுத்தி வருகிறது. பிரச்சினைகளில் இருந்து ஓட்டு வாங்கும் முயற்சியை ராகுல்காந்தி கைவிட வேண்டும். நாட்டில் ஜனநாயகம் இல்லை என்று அவர் கூறுகிறார்.
ஜனநாயகம் இருப்பதால்தான் அவர் பேட்டி அளிக்க முடிகிறது. சோனியாகாந்தி குடும்பத்துக்கு காங்கிரசை பற்றிக்கூட கவலை இல்லை. தங்கள் செல்வவளம் குறையாமல் பார்த்துக் கொள்வதில்தான் கவனமாக இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.