லகிம்பூர் கேரி வன்முறை; ஆஷிஷ் மிஸ்ரா நேபாளத்திற்கு தப்பி ஓட்டமா..?

ஆஷிஷ் மிஸ்ரா உள்ளிட்டோர் மீது கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
லகிம்பூர் கேரி வன்முறை; ஆஷிஷ் மிஸ்ரா நேபாளத்திற்கு தப்பி ஓட்டமா..?
Published on

லகிம்பூர் கேரி,

உத்தரபிரதேசத்தின் லகிம்பூர் கேரி மாவட்டத்தில், மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ராவின் சொந்த ஊரான திகுனியாவில் கடந்த 3-ந்தேதி நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக மாநில துணை முதல்-மந்திரி கேசவ் பிரசாத் மவுரியா வருவதாக இருந்தது. அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்டுவதற்காக பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் திகுனியா-பல்பீர்பூர் சாலையில் திரண்டனர்.

அவர்கள் மீது பா.ஜனதாவினர் காரைக்கொண்டு மோதி பெரும் களேபரத்தில் ஈடுபட்டனர். இதில் 2 விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த படுபாதக செயலை மத்திய மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா அரங்கேற்றியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அங்கு மூண்ட கலவரத்தில் மேலும் 2 விவசாயிகள் உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர். மொத்தம் 8 பேரை பலிவாங்கிய இந்த வன்முறை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

விவசாயிகள் மீது காரை ஏற்றிய ஆஷிஷ் மிஸ்ரா உள்ளிட்டோரை கைது செய்ய வேண்டும் எனவும், அவரது தந்தையும், மத்திய மந்திரியுமான அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும் எனவும் விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். மேலும் இந்த வன்முறை தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் எனவும் நாடு முழுவதும் கோரிக்கை வலுத்து வருகிறது.

இதைத்தொடர்ந்து ஆஷிஷ் மிஸ்ரா உள்ளிட்டோர் மீது கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ஆஷிஷ் பாண்டே மற்றும் லவ்குஷ் ஆகிய இருவரை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.மேலும் இந்த வன்முறை தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு ஆஷிஷ் மிஸ்ராவுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

இந்த நிலையில், ஆஷிஷ் மிஸ்ரா இதுவரை போலீசார் விசாரணைக்கு ஆஜராகவில்லை. ஆஷிஷ் மிஸ்ரா நேபாளத்திற்கு தப்பி ஓடிவிட்டதாகவும் பரவலாக செய்திகள் வெளியாகின. ஆனால், ஆஷிஷ் மிஸ்ரா நேபாளம் தப்பி விட்டதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என்று அவரது உறவினர் அபிஜத் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அபிஜத் மிஸ்ரா மேலும் கூறுகையில், அபிஜத் மிஸ்ராவுக்கு லகிம்பூர் கேரியில்தான் உள்ளார். அவர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கிறார். அவர் எங்கும் தப்பி ஓட மாட்டார். சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை ஆஷிஷ் மிஸ்ரா எதிர்கொள்வார். போலீசார் முன்பு எப்போது அஷிஷ் மிஸ்ரா ஆஜர் ஆவார் என்பதை நான் கூற முடியாது. ஆனால் கண்டிப்பாக ஆஜராவார் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com