

லக்னோ,
உத்தரபிரதேசம் லக்கிம்பூரில் ஏற்பட்ட வன்முறையில் விவசாயிகள் 4 பேர் உள்பட 9 பேர் பலியாகினர். இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது பாஜக தொண்டர்கள் வந்த கார் அணிவகுப்பு மோதியதில் விவசாயிகள் உயிரிழந்தனர். அதன்பின்னர் விவசாயிகளுக்கும் பாஜகவினருக்கும் இடையே ஏற்பட்ட வன்முறையில் 4 விவசாயிகள், ஒரு பத்திரிக்கையாளர் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.
இதற்கிடையில், விவசாயிகள் மீது மோதிய காரில் தனது மகன் ஆஷிஷ் மிஸ்ரா பயணிக்கவில்லை அவர் மீது பொய்யான குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக மத்திய இணைமந்திரி அஜய் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், லக்கிம்பூரில் ஏற்பட்ட வன்முறையில் தன் மகன் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் மத்திய இணை மந்திரி பதவியில் இருந்து விலகுவதாக அஜய் மிஸ்ரா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், வன்முறை நடைபெற்ற லக்கிம்பூர் கேரியில் எனது மகன் இருந்ததற்கான ஒற்றை ஆதாரம் இருந்தாலும் நான் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன் என்றார்.