விவசாயிகள் போராட்ட வன்முறை குறித்த விசாரணைக்கு ஆஜராகாததால் மத்திய மந்திரி மகனுக்கு மீண்டும் சம்மன்

உத்தரபிரதேசத்தின் லகிம்பூரில் நடந்த விவசாயிகள் போராட்ட வன்முறை குறித்த விசாரணைக்கு ஆஜராகாததால், மத்திய மந்திரியின் மகனுக்கு போலீசார் மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளனர்.
விவசாயிகள் போராட்ட வன்முறை குறித்த விசாரணைக்கு ஆஜராகாததால் மத்திய மந்திரி மகனுக்கு மீண்டும் சம்மன்
Published on

மத்திய மந்திரியின் மகன்

உத்தரபிரதேசத்தின் லகிம்பூர் கேரி மாவட்டத்தில் கடந்த 3-ந் தேதி மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ரா, மாநில துணை முதல்-மந்திரி கேசவ் பிரசாத் மவுரியா ஆகியோருக்கு எதிராக கருப்பு கொடி காட்டுவதற்கு குவிந்த விவசாயிகள் மீது பா.ஜனதாவினர் காரைக்கொண்டு மோதினர். இதில் 2 விவசாயிகள் உயிரிழந்தனர்.இதைத்தொடர்ந்து அங்கு ஏற்பட்ட வன்முறையில் மேலும் 2 விவசாயிகள் உள்பட 6 பேர் பலியாகினர். விவசாயிகள் மீது மோதிய காரில் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா இருந்ததாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.எனவே அவரை கைது செய்யவும், அஜய் மிஸ்ரா தனது பதவியை ராஜினாமா செய்யக்கோரியும் விவசாயிகளும், எதிர்க்கட்சிகளும் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.ஆனால் இந்த குற்றச்சாட்டை மத்திய மந்திரி அஜய் மிஸ்ரா மறுத்துள்ளார்.

2 பேர் கைது

4 விவசாயிகள் உள்பட 8 பேரை பலிகொண்ட இந்த சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படுகொலை மற்றும் வன்முறை சம்பவம் தொடர்பாக ஆஷிஷ் மிஸ்ரா உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இதில் 2 பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்.அதேநேரம் ஆஷிஷ் மிஸ்ராவை விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். காலை 10 மணிக்கு முன் போலீசார் முன் ஆஜராக அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் இதை ஏற்று அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன்

இதைத்தொடர்ந்து அவருக்கு போலீசார் மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளனர். அதில் நாளை (சனிக்கிழமை) காலை 11 மணிக்குள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த சம்மனை மத்திய மந்திரி அஜய் மிஸ்ராவின் வீட்டில் போலீசார் ஒட்டியுள்ளனர்.தலைமறைவாகி இருக்கும் ஆஷிஷ் மிஸ்ரா தனது இருப்பிடத்தை அடிக்கடி மாற்றி வருவதாக விவசாய கூட்டமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சா கூறியுள்ளது.அவர் இதுவரை கைது செய்யப்படாதது குறித்து அதிர்ச்சியும், கவலையும் வெளியிட்டு உள்ளது. ஆஷிஷ் மிஸ்ரா சுதந்திரமாக நடமாடுவதை உறுதி செய்வதற்காக உத்தரபிரதேச அரசும், மந்திரி அஜய் மிஸ்ராவும் பாதுகாப்பு தந்திரங்களை கடைப்பிடிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.இதைப்போல விவசாயிகள் மீது கார் ஏற்றிய சம்பவத்தில் தொடர்புடைய சுமித் ஜெய்ஸ்வால் மற்றும் அங்கித் தாஸ் என்ற இருவரை இதுவரை கைது செய்யாதது குறித்தும் இந்த அமைப்பு கேள்வி எழுப்பி உள்ளது.

நேபாளத்துக்கு தப்பினாரா?

இதற்கிடையே மந்திரியின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா நேபாளத்துக்கு தப்பி ஓடியிருக்கலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது.இது உண்மை என்றால் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, நேபாளத்தில் இருந்து அவரை கைது செய்து நாடு கடத்திக்கொண்டு வர வேண்டும் என சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தி உள்ளார்.

உத்தரபிரதேச வன்முறையில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஆஷிஷ் மிஸ்ரா இதுவரை கைது செய்யப்படாதது எதிர்க்கட்சிகளிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com