லகிம்பூர் கேரி வன்முறை: மத்திய மந்திரியின் மகன் விரைவில் கைது?

மத்திய மந்திரியின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை முடிவடைந்த நிலையில் விரைவில் கைது செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லகிம்பூர் கேரி வன்முறை: மத்திய மந்திரியின் மகன் விரைவில் கைது?
Published on

லக்னோ,

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்தரபிரதேசத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போராட்டத்தில் லகிம்பூர் கேரி மாவட்ட விவசாயிகளும் தீவிரமாக பங்கேற்று வருகின்றனர்.

இதற்கிடையில், மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ரா லகிம்பூர் கேரி மாவட்டத்தின் திகுனியா அருகே உள்ள பன்வீர்பூரை சேர்ந்தவர் ஆவார். இந்த கிராமத்தில் கடந்த 3ந்தேதி நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக மாநில துணை முதல்-மந்திரி கேசவ் பிரசாத் மவுரியா வருவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

எனவே அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அண்டை கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் திகுனியாவில் திரண்டனர். அப்போது அந்த வழியாக பா.ஜ.க.வினரின் வாகன அணிவகுப்பு ஒன்று வந்தது. இதில் கார் ஒன்று விவசாயிகள் மீது பயங்கரமாக மோதியது.

இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த விவசாயிகள் பா.ஜ.க.வினர் வந்த வாகனங்களை அடித்து நொறுக்கினர். இதனால், அங்கு வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வன்முறை மேலும் பரவாமல் இருக்க லகிம்பூர் கேரி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டன.

வன்முறை நடைபெற்ற பன்வீர்பூருக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தி சென்று விவசாயிகளின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தனர்.

இந்தநிலையில், லக்கிம்பூர் வன்முறை வழக்கில் முக்கியக் குற்றவாளியான மத்திய மந்திரியின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை முடிவடைந்த நிலையில் விரைவில் கைது செய்யப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கைது நடவடிக்கை குறித்து காவல் துறை தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும், அவர் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விசாரணையின்போது வன்முறை குறித்த ஆஷிஷ் மிஸ்ராவின் வாக்குமூலம் நம்பும்படியாக இல்லை என்பதால் மேற்கொண்டு பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்ய மாவட்டக் காவல் துறையை சிறப்புப் புலனாய்வுக் குழு பரிந்துரைத்துள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com