லாலு பிரசாத்துக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும்: தேஜ் பிரதாப்

நிதிஷ் குமாருக்கு கொடுக்க வேண்டும் என்றால், லாலு பிரசாத்துக்கும் பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என தேஜ் பிரதாப் கூறினார்.
பாட்னா,
பீகாரில் முதல்-மந்திரி நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, ஐக்கிய ஜனதா தளம் மீண்டும் ஆட்சியை தக்க வைத்து கொண்டது. நிதிஷ் குமார் 10-வது முறையாக முதல்-மந்திரியாகி உள்ளார்.
இந்நிலையில், அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என கோரி, அக்கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் ராஜ்யசபை உறுப்பினரான கே.சி. தியாகி, பிரதமர் மோடியை வலியுறுத்தி உள்ளார்.
நீண்டகாலம் முதல்-மந்திரியாக சேவையாற்றி வரும் அவர், பீகார் அரசியல் மட்டுமின்றி தேசிய அளவிலும், புதிய வழிகாட்டலை ஏற்படுத்தி தந்து உள்ளார். சமூகத்தில் சமத்துவம் ஏற்படுத்தியவர். சமூக நீதி, நல்ல நிர்வாகம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் என தொடர்ச்சியாக உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் செயல்பட்ட அவர் தேசிய அங்கீகாரம் பெற தகுதி படைத்தவர் என புகழ்ந்து கூறியுள்ளார்.
அதனால், நிதிஷ் குமாருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். பலர் தங்களுடைய வாழ்நாளிலேயே இந்த கவுரவம் பெற்றுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் சார்பாக, நிதிஷ் குமாருக்கு இந்த கவுரவம் கிடைக்கும் என நாங்கள் நம்புகிறோம். அதனால், பிரதமர் மோடியை வரலாறு பாராட்டும் என்றும் கூறினார்.
இந்நிலையில், பீகாரின் முன்னாள் முதல்-மந்திரி லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜ் பிரதாப் யாதவ் பாட்னா நகரில் செய்தியாளர்களிடம் பேசினார். ஜனசக்தி ஜனதா தளம் என தனியாக கட்சி நடத்தி வரும் அவர் கூறும்போது, நிதிஷ் குமாருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என சிலர் கூறுகின்றனர்.
அப்படி நிதிஷ் குமாருக்கு கொடுக்க வேண்டும் என்றால், அதனை லாலு பிரசாத்துக்கும் கொடுக்க வேண்டும். ஏனெனில், என்னுடைய தந்தையும், நிதிஷ் குமாரும் சகோதரர்கள் போன்றவர்கள் என கூறப்படுவதுண்டு. இது ஜனசக்தி ஜனதா தள கட்சியின் கோரிக்கை என கூறினார்.
எனினும், நிதிஷ் குமாருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என தியாகி வலியுறுத்தியது பற்றி ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராஜீவ் ரஞ்சன் பிரசாத் கூறும்போது, நிதிஷ் குமார் ஆரோக்கியத்துடன் உள்ளார். அவர் பீகார் மக்களுக்கு தொடர்ந்து சேவையாற்றி வருகிறார். ஆனால், தியாகியின் பேச்சுக்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது அவருடைய தனிப்பட்ட பேச்சு என கூறினார்.






