

புதுடெல்லி,
ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சி முன்னாள் எம்.பி. முகமது சகாபுதீன் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இவர் ஜெயிலில் இருந்தபடி கட்சித் தலைவர் லல்லு பிரசாத் யாதவுடன் டெலிபோனில் பேசினார். அதில் உள்ளூர் போலீஸ் அதிகாரி ஒருவருக்கு எதிராக புகார் கூறிய சகாபுதீன் அந்த காவல் துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்குமாறு லல்லு பிரசாத்திடம் தெரிவித்தார். அவர்களது டெலிபோன் உரையாடல் ரகசியமாக டேப் செய்யப்பட்டு நேற்று தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இது பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பா.ஜனதா மூத்த தலைவரும் மத்தியசட்ட மந்திரியுமான ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ஜெயிலில் இருக்கும் கைதியுடன் லல்லுபிரசாத் பேசுவது வெட்கக்கேடான செயல் என்று குற்றம் சாட்டி உள்ள அவர் ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கும் நிதிஷ்குமார் லல்லுவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும் ஆளும் பா.ஜனதாவுக்கு எதிராக மதச்சார்பற்ற கூட்டணியை ஒருங்கிணைக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி, சரத்யாதவ், சீதாராம்யெச்சூரி ஆகியோர் கடுமையாக உழைக்கிறார்கள். அவர்கள் இதுபோன்ற குற்றங்களை சகித்துக் கொள்வார்களா? ஊழல்கள், குற்றங்கள், அரசியலில் இருந்து விலகும் இந்த நேரத்தில் லல்லு பிரசாத் போன்றவர்கள் பழைய பாணியையே தொடர்வது வெளிச்சத்துக்கு வந்துள்ளது என்றும் ரவிசங்கர் பிரசாத் குற்றம் சாட்டினார்.
இதற்கிடையே மாநில பா.ஜனதா தலைவர் நித்தியானந்தா ராவ் கூறுகையில், லல்லு பிரசாத் - சகாபுதீன் உரையாடல் மூலம் மாநில அரசுக்கும் குற்றவாளிகளுக்கும் இடையே உள்ள ரகசிய தொடர்பை அம்பலப்படுத்தி உள்ளது. ஆட்சியை தக்க வைக்க நிதிஷ்குமார் யாருடனும் கை கோர்ப்பார் என்பதையே காட்டுகிறது. எனவே அவர் பதவி விலக வேண்டும் எனறார். இதேபோல் பா.ஜனதா மூத்த தலைவரான சுஷில் குமார் மோடி கூறுகையில் ஜெயிலில் இருப்பவர்களுடன் தொலைபேசியில் பேசிய லல்லுபிரசாத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
சகாபுதீன் சிறையில் இருந்தபடி எப்படி தனி அரசாங்கத்தை நடத்துகிறார் என்பதும், அவரை சார்ந்து லாலுவும், நிதீஷ் குமாரும் செயல்படுவதும் அந்தத் தொலைபேசி உரையாடல் மூலம் தெளிவாகிறது என்றார் சுஷில் குமார் மோடி.
மேலும் அவர் பா.ஜனதா நிர்வாகிகளுடன் மாநில கவர்னர் ராம்நாத் கோவிந்த்தை சந்தித்து லல்லு பிரசாத் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக்கோரி மனு கொடுத்தார்.