

பாட்னா,
ரயில்வே ஓட்டல் நிலம் பேர ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் அடுத்த வாரம் நேரில் ஆஜராக வேண்டும் என்று சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. வரும் திங்கள் கிழமை லாலு பிரசாத் யாதவும் அதற்கு மறுநாள் தேஜஸ்வி யாதவும் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பபட்டுள்ளது.
பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் கடந்த 2004 - 2009 ஆண்டுகளில் மத்திய ரெயில்வே மந்திரியாக பதவி வகித்தார். அப்போது, ராஞ்சி மற்றும் பூரி நகரங்களில் ஐ.ஆர்.சி.டி.சி-யின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த சில ஓட்டல்களை கட்டமைப்பது மற்றும் பராமரிப்பதற்கு விடப்பட்ட டெண்டர்களில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி, சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்தது. பாட்னாவில் மூன்று ஏக்கர் நிலத்தை லஞ்சமாக பெற்றுக்கொண்டு இந்த டெண்டரை வழங்கியதாக லாலு பிரசாத் யாதவ் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
கையூட்டாக பெற்ற நிலத்தில் மூன்று மாடிகள் கொண்ட வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. இந்த வணிக வளாகம் அமைந்துள்ள நிலத்தின் உரிமையாளர்களில் ஒருவராக தேஜஸ்வி யாதவும் உள்ளார். இதன்காரணமாக அவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.