முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு.. மண்டல் கமிஷன் அறிக்கைக்கு எதிரானது: லாலுவை சாடிய ஐக்கிய ஜனதா தளம்

இடஒதுக்கீடு வழங்குவதில் மதத்தை ஒரு அளவுகோலாக அரசியலமைப்பில் குறிப்பிடப்படவில்லை என ஐக்கிய ஜனதா தளம் கூறி உள்ளது.
முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு.. மண்டல் கமிஷன் அறிக்கைக்கு எதிரானது: லாலுவை சாடிய ஐக்கிய ஜனதா தளம்
Published on

புதுடெல்லி:

பீகாரின் முன்னாள் முதல்-மந்திரியும் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவருமான லாலு பிரசாத் யாதவ், சமீபத்தில் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசும்போது, முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டு சலுகைகளை நீட்டிக்க ஆதரவு அளிப்பதாக கூறினார். மேலும், மத்தியில் ஆளும் பா.ஜ.க., அரசியலமைப்பை ரத்து செய்வதன் மூலம் இடஒதுக்கீட்டை அகற்ற விரும்புவதாகவும் குற்றம்சாட்டினார்.

லாலுவின் இந்த கருத்திற்கு ஐக்கிய ஜனதா தளம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் கே.சி.தியாகி கூறியதாவது:-

லாலு பிரசாத் யாதவின் கருத்து கண்டிக்கத்தக்கது. இது மண்டல் கமிஷன் அறிக்கை மற்றும் அரசியலமைப்புக்கு எதிரான செயல். இத்தகைய கருத்து சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய நிலையில் இடஒதுக்கீடு பெறும் பிற்படுத்தப்பட்டோருக்கு எதிரான சதிக்கு நிகரானது.

மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்துவதற்கான இயக்கத்தின் ஒரு பகுதியாக இருந்த லாலுவைப் போன்ற ஒருவர் இவ்வாறு கூறுவது துரதிர்ஷ்டவசமானது.

இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களில் சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்தங்கிய பிரிவினருக்கும், சாதி அடிப்படையில் பிளவுபட்டுள்ளவர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்க மண்டல் கமிஷன் பரிந்துரை செய்துள்ளது. இடஒதுக்கீட்டு பலன்களை நீட்டிக்க மதம் ஒரு அளவுகோலாக இருக்க முடியாது.

சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய மக்களுக்கான இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என அரசியலமைப்புச் சட்டத்திலும் உள்ளது. மதத்தை ஒரு அளவுகோலாக அதில் குறிப்பிடவில்லை.

இவ்வாறு கே.சி.தியாகி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com