

மும்பை,
துபாயில் நடைபெற்ற உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற நடிகை ஸ்ரீதேவி, எதிர்பாரத விதமாக திடீரென மரணம் அடைந்தார். முதலில் மாரடைப்பால் ஸ்ரீதேவி உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகின. உடற்கூறு ஆய்வுக்கு பிறகு, ஸ்ரீதேவி மாரடைப்பால் இறக்கவில்லை. அவர் மது போதையில், குளியல் தொட்டியில் விழுந்து, மூச்சு விடமுடியாமல் மரணமடைந்தார் என அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக ஸ்ரீதேவி உடலை உறவினர்களிடம் ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டது.
ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பாக விசாரணையை துபாய் காவல்துறை மேற்கொண்டது. ஸ்ரீதேவியின் மரணத்தில் குற்ற நோக்கம் எதுவும் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்ததையடுத்து இந்த வழக்கை துபாய் போலீஸ் முடித்து வைத்தது.
இதன்பிறகு, உரிய நடைமுறைகளுக்கு பிறகு ஸ்ரீதேவியின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதை தொடர்ந்து நடிகை ஸ்ரீதேவி உடல் பதப்படுத்தும் பணி தொடங்கியது. உடலை பதப்படுத்தும் பணி முடிந்ததும் துபாய் சுகாதார அதிகாரிகளால் உடலை பதப்படுத்திய சான்றிதழ் வழங்கபட்டது , உடனடியாக அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் துபாய் விமான நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. துபாய் விமான நிலையத்திலிருந்து, ஸ்ரீதேவி உடல் தனி விமானம் மூலம் இந்தியா எடுத்துச்செல்லப்பட்டுள்ளது ஸ்ரீதேவியின் உடல் இன்று இரவு 10 மணிக்குள் மும்பை விமான நிலையம் கொண்டு வர வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
நாளை காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை ஸ்ரீதேவியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அந்தேரி மேற்கு செலிபிரேஷன் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் ஸ்ரீதேவி உடல் அஞ்சலிக்கு வைக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து பிற்பகல் 2 மணிக்கு இறுதி ஊர்வலம் தொடங்குகிறது. பின்னர் மும்பை வில்லர்பாலே மின் மயனாத்தில் 3.30 மணிக்கு இறுதிச்சடங்கு செய்யப்பட்டு பாரம்பரிய முறைப்படி ஸ்ரீதேவியின் உடல் தகனம் செய்யப்படுகிறது.