

புதுடெல்லி,
மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த ஒரு பதிலில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:-
கடந்த ஜனவரி 1-ந் தேதி நிலவரப்படி நாட்டில் சமையல் கியாஸ் நுகர்வோரின் மொத்த எண்ணிக்கை 28.90 கோடி. இதுதவிர 70.75 லட்சம் பேர் குழாய்வழி கியாஸ் இணைப்பை பெற்றுள்ளனர். தற்போது மொத்த வினியோக அளவு 99.5 சதவீதமாக உள்ளது.
உயிரி எரிபொருள் தேசியக்கொள்கை திட்டத்தின்படி, பெட்ரோலுடன் எத்தனால் கலப்பதை அரசு ஊக்குவித்து வருகிறது. 2030-ம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 சதவீத எத்தனாலை கலந்து விற்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதற்காக கரும்பு மற்றும் உணவு தானியங்களில் இருந்து எத்தனால் உற்பத்தி செய்ய அரசு அனுமதித்து உள்ளது. கடந்த 2019-2020-ம் ஆண்டில் 173.03 கோடி லிட்டர் எத்தனால், பெட்ரோலுடன் கலப்பதற்காக எண்ணெய் நிறுவனங்களுக்கு வினியோகிக்கப்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் கச்சா எண்ணெய் விலை குறைந்து இருந்தபோது நாட்டில் உள்ள பெட்ரோலிய சேமிப்பு கிடங்குகளில் முழு கொள்ளளவுக்கு கச்சா எண்ணெய் வாங்கி நிரப்பப்பட்டது.
இவ்வாறு அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.