

புதுடெல்லி,
அதிவேகமாக பரவி வரும் கொரோனா தாக்குதலுக்கு இதுவரை உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.25 லட்சத்தை கடந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,276ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 171 ஆக உயரந்து உள்ளது. நாட்டில் கொரோனா தொற்றுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்து உள்ளது.
இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனாவைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில் மத்திய நல்வாழ்வுத் துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் புதுடெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
இந்தியாவில் நடைபெற இருந்த அனைத்து விளையாட்டு போட்டிகள், பொது நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட வேண்டும்.
கொரோனா பரவலைத் தடுக்க தனித்திருத்தல் அவசியம். தனியார் துறையினர் இயன்றவரை வீட்டிலிருந்து பணியாற்ற அறிவுரை வழங்குமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் மார்ச் 22-ம் தேதி வரை சர்வதேச விமானங்கள் தரையிறங்கத் தடை விதிக்கப்படுகிறது. தேவையற்ற ரெயில் பயணங்களைத் தவிர்க்கும் வகையில் ரெயில்களில் கட்டணச் சலுகை ரத்து செய்யப்படுகிறது.
ரெயில், விமானங்களில் மாணவர்கள், நோயாளிகள் உள்ளிட்டோருக்கு மட்டுமே கட்டணச் சலுகை நீடிக்கும். அதன்படி, தற்போது பயன்பாட்டில் உள்ள 53 வகையான கட்டணச் சலுகைகளில் வெறும் 15 மட்டுமே பயன்படுத்த முடியும் வகையில் மாற்றம் செய்யப்படுகிறது. என்-95 முகக்கவசங்கள் நாட்டில் போதுமான அளவில் கிடைக்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.