முத்தலாக் மசோதா நிறைவேற்றம் குறித்து தலைவர்கள் கருத்து

முத்தலாக் மசோதா மாநிலங்களவையில் நேற்று நிறைவேறியது. இதற்கு ஆதரவாகவும், எதிர்ப்பு தெரிவித்தும் அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
முத்தலாக் மசோதா நிறைவேற்றம் குறித்து தலைவர்கள் கருத்து
Published on

புதுடெல்லி,

மத்திய அரசின் கனவு மசோதாக்களில் முத்தலாக் தடை மசோதாவும் ஒன்று. ஏற்கனவே பலமுறை முயன்றும் நிறைவேற்ற முடியாத இந்த மசோதா நேற்று மாநிலங்களவையில் நிறைவேறியது. இதன் மூலம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மசோதா நிறைவேறி இருக்கிறது.

இதற்கு அரசியல் தலைவர்கள் மத்தியில் ஆதரவும், எதிர்ப்பும் காணப்படுகிறது. அது பற்றிய விவரம் வருமாறு:-

இந்த மசோதா நிறைவேறியது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி வெளியிட்டு உள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், தொன்மையானதும், இடைக்காலத்தில் பின்பற்றப்பட்டதுமான ஒரு பழக்கம், இறுதியில் வரலாற்றின் குப்பைத்தொட்டிக்கு சென்று இருக்கிறது. முஸ்லிம் பெண்களுக்கு இழைக்கப்பட்ட வரலாற்று தவறை நாடாளுமன்றம் இன்று சரி செய்திருக்கிறது. முத்தலாக்கை அழித்து இருக்கிறது. இது பாலின நீதிக்கு கிடைத்த வெற்றியாகும். இதன் மூலம் சமூகத்தில் சமத்துவம் மலரும். இந்தியா இன்று மகிழ்கிறது என்று குறிப்பிட்டு உள்ளார்.

அமித்ஷா (உள்துறை மந்திரி): முத்தலாக்கை தடை செய்யும் சட்டத்தை உறுதி செய்து, தனது உறுதிப்பாட்டை நிறைவேற்றியதற்காக பிரதமர் மோடியை பாராட்டுகிறேன். இதன் மூலம் பிற்போக்குத்தனமான இந்த பழக்கத்தின் சாபத்தில் இருந்து முஸ்லிம் பெண்கள் விடுதலையாவார்கள். இந்த வரலாற்று சிறப்பு மிக்க மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்த அனைத்து கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

அபிஷேக் மனு சிங்வி (காங்கிரஸ்): அடிப்படையில் இந்த மசோதாவை நாங்களும் ஆதரித்தோம். முஸ்லிம் பெண்களுக்கு ஆதரவளிக்கும் திருத்தங்களை கொண்டு வர நாங்களும் விரும்பினோம். எங்கள் எதிர்ப்பு எல்லாம் சில பிரச்சினைகளில்தான். முத்தலாக்கை சுப்ரீம் கோர்ட்டு தடை செய்திருக்கிறது, நீங்களும் (மத்திய அரசு) சட்டம் மூலம் தடை செய்திருக்கிறீர்கள். அப்படியிருக்க ஒரு கற்பனை விஷயத்தை குற்ற செயலாக்க வேண்டிய அவசியம் என்ன?

கனிமொழி எம்.பி. (தி.மு.க.): முத்தலாக் மசோதா வெற்றி பெறுவதற்கு வசதியாக, அ.தி.மு.க. வெளிநடப்பு செய்தது வெட்கக்கேடானது.

டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் (பா.ஜனதா): வாக்கு வங்கிக்காகவே முத்தலாக் சட்டத்தை தமிழக கட்சிகள் எதிர்க்கின்றன. முஸ்லிம் பெண்களின் உரிமை பறிக்கப்படுவதை பிரதமர் மோடி தடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com