கேரளாவில் மீண்டும் இடதுசாரி கூட்டணி ஆட்சி; பினராயி விஜயன் முதல்-மந்திரி ஆகிறார்

கேரள சட்டசபை தேர்தலில் இடதுசாரி கூட்டணி வரலாற்று வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது. பினராயி விஜயன் மீண்டும் முதல்-மந்திரி பதவி ஏற்கிறார்.
கேரளாவில் மீண்டும் இடதுசாரி கூட்டணி ஆட்சி; பினராயி விஜயன் முதல்-மந்திரி ஆகிறார்
Published on

கேரள சட்டசபை தேர்தல்

140 இடங்களைக் கொண்ட கேரள சட்டசபைக்கு கடந்த மாதம் 6-ந்தேதி தமிழக சட்டசபை தேர்தலுடன் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. அங்கு ஒவ்வொரு தேர்தலிலும் ஆட்சி மாற்றம் என்பதுதான் கடந்த கால வரலாறு. இந்த வரலாற்றை மாற்றி ஆட்சியை தக்க வைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைமையிலான இடதுசாரி கூட்டணி முயற்சியில் இறங்கியது. ஆனால் ஆட்சியைப் பிடித்து வரலாற்றைத் தக்க வைக்க காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி தீவிரம் காட்டியது. பா.ஜ.க. தலைமையிலான தே.ஜ.கூட்டணியும் ஆட்சியைப் பிடிக்கும் கனவில் முழுவீச்சில் களம்கண்டது. மாநிலத்தில் 957 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கொரோனா தொற்று பரவலுக்கும் மத்தியில் மாநிலத்தில் 74.06 சதவீத வாக்குகள் பதிவானது கவனத்தை ஈர்ப்பதாக அமைந்தது.

இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி நடந்தது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பெரும்பாலான தொகுதிகளில் ஆளும் இடதுசாரி கூட்டணி வேட்பாளர்களே முன்னிலை பெற்றனர்.

71 இடங்களைப் பெற்றால் பெரும்பான்மை பலம் என்ற நிலையில் வெற்றிப்பாதையில் இடதுசாரி கூட்டணி பயணித்தது. எதிர்பார்த்ததுபோலவும், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை பிரதிபலிப்பது போலவும் இடதுசாரி கூட்டணி 99 இடங்களில் அமோக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்து வரலாற்று சாதனை புரிந்துள்ளது. காங்கிரஸ் கூட்டணிக்கு 41 இடங்கள் கிடைத்தது. பா.ஜ.க. கூட்டணி ஒரு இடத்தில் கூடவெற்றி பெறவில்லை.

எனவே இங்கு பினராயி விஜயன் மீண்டும் முதல்-மந்திரி பதவி ஏற்பது உறுதியாகி இருக்கிறது. அவருக்கு பல தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிகின்றன.

* முதல்-மந்திரி பினராயி விஜயன் தர்மதம் தொகுதியில் வெற்றி பெற்றார்.

* முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி (காங்கிரஸ்) புதுப்பள்ளி தொகுதியில் இருந்து வெற்றி பெற்றிருக்கிறார்.

* சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா ஹரிபாத் தொகுதியில் வெற்றி பெற்றார்.

* மாநில பா.ஜ.க. தலைவர் கே.சுரேந்திரன் தான் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் (மஞ்சேஸ்வரம், கொன்னி) தோல்வியைத் தழுவினார்.

* மெட்ரோமனிதர் இ.ஸ்ரீதரன் (பா.ஜ.க.) பாலக்காடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஷபி பரம்பலிலிடம் தோல்வி அடைந்தார்.

* திரிச்சூர் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக களமிறங்கிய நடிகர் சுரேஷ் கோபி, இடதுசாரி கூட்டணி வேட்பாளர் பி.பாலசந்திரனிடம் (இந்திய கம்யூ.) தோற்றார். இரண்டாவது இடத்தை காங்கிரஸ் வேட்பாளர் பத்மஜா பிடிக்க, இவருக்கு 3-வது இடம் கிடைத்தது.

* பா.ஜ.க. மூத்த தலைவர் கும்மணம் ராஜசேகரன், நேமம் தொகுதியில் தோல்வியைத்தழுவினார். அங்கு இடதுசாரி கூட்டணி வேட்பாளர் சிவன்குட்டி வெற்றி பெற்றார்.

* இடதுசாரி கூட்டணி வேட்பாளரும், கேரள காங்கிரஸ் (மாணி) தலைவருமான ஜோஸ் கே.மாணி, பலா தொகுதியில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் மணி கப்பனிடம் தோல்வி அடைந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com