

பெங்களூரு,
கர்நாடக மாநிலம் சாமராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகாவில் புகழ்பெற்ற மாதேஸ்வரன் மலை அமைந்துள்ளது. இங்குள்ள அடர்ந்த வனப்பகுதியில் சமீபகாலமாக சிறுத்தைகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. பெங்களூருவை சேர்ந்த 10 வயது சிறுவன் ஹர்ஷித், தனது குடும்பத்தினருடன் நேற்று மாதேஸ்வரா கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்திருந்தான்.
காலை 7 மணி அளவில், நாகமலை நோக்கி பாதயாத்திரை செல்லும் கரடுமுரடான பாதையில் அவர்கள் சென்றனர். அப்போது புதருக்குள் பதுங்கியிருந்த சிறுத்தை ஒன்று, மின்னல் வேகத்தில் பாய்ந்து வந்து சிறுவன் ஹர்ஷித்தை கவ்வியது. கண்ணிமைக்கும் நேரத்தில் அவனை அடர்ந்த காட்டுக்குள் இழுத்து சென்றது. இதனால் அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர் அலறினார்கள். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு மற்ற பக்தர்கள் ஓடி வந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் வந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சிறிது தூரத்தில் ஹர்ஷித் ரத்த வெள்ளத்தில் பிணமாக கண்டெடுக்கப்பட்டான். அவனது உடலின் சில பாகங்களை சிறுத்தை கடித்து குதறி தின்றிருந்தது.
வனத்துறையினரின் அலட்சியமே இந்த உயிரிழப்புக்கு காரணம் எனக்கூறி பக்தர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்கொல்லி சிறுத்தையை உடனடியாக சுட்டுக்கொல்ல வேண்டும் அல்லது கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோர சம்பவத்தை தொடர்ந்து நாகமலை செல்லும் பாதையில் மலையேற்றத்திற்கு வனத்துறை தற்காலிக தடை விதித்துள்ளது.