ராஜஸ்தானில் பூங்காவுக்குள் புகுந்த சிறுத்தை: 3 மணி நேர போராட்டத்துக்கு பிறகு பிடிபட்டது

மீட்பு நடவடிக்கையில் 2 கால்நடை மருத்துவர்கள் உள்பட 25 பேர் கொண்ட குழு ஈடுபட்டது.
ராஜஸ்தானில் பூங்காவுக்குள் புகுந்த சிறுத்தை: 3 மணி நேர போராட்டத்துக்கு பிறகு பிடிபட்டது
Published on

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானில் பூங்காவுக்குள் புகுந்த சிறுத்தையை 3 மணி நேர போராட்டத்துக்கு வனத்துறையினர் பிடித்தனர்.

பூங்காவில் சிறுத்தை

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் சத்ரா விலாஸ் கார்டன் என்ற பொழுது போக்கு பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் நேற்று காலை வழக்கம் போல் மக்கள் காலை நடைப்பயிற்சி, யோகா மற்றும் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தனர். அப்போது பூங்காவின் ஒரு பகுதியில் சிறுத்தை நடமாடுவது தெரிய வந்தது. இதனை கண்டதும் மக்களிடையே பீதி ஏற்பட்டது.

உடனடியாக பூங்கா நிர்வாகம் அங்கிருந்தவர்களை பாதுகாப்பாக வெளியேற்றி பூங்காவின் நுழைவுவாயிலை மூடியது. அப்பகுதியில் போலீசாரும், ஆயுத காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சிறுத்தை பூங்காவுக்குள் ஊடுருவிய செய்தி நகரம் முழுவதும் வேகமாக பரவியதால், பூங்காவை சுற்றிலும் பெருங்கூட்டம் கூடியது.

மரத்தில் ஏறிய சிறுத்தை

பின்னர் வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. பார்வையாளர்கள் கூச்சலை கேட்டு பதற்றமடைந்த சிறுத்தை 40 அடி உயரமுள்ள நாவல் மரத்தின் கிளைக்கு சென்றது. தகவல் அறிந்து அங்கு வந்த வனத்துறை குழுவினர் கால்நடை மருத்துவர் அறிவுத்தலின் பேரில் கீழிருந்து மயக்க மருந்து செலுத்தும் அம்பு மூலம் சிறுத்தையை சுட முயன்றனர்.

பாதுகாப்பு வலை

சிறுத்தை கீழே விழுவதை தடுக்க மரத்தின் கீழ் பாதுகாப்பு வலை அமைக்கப்பட்டது. மீட்பு குழுவினர் மரத்தின் உச்சியில் இருந்த சிறுத்தையை நோக்கி 5 முறை மயக்க மருந்து தடவிய அம்புகளை சுட்டனர். மரத்தின் அடர்த்தி காரணமாக முதல் 4 முயற்சிகளும் தோல்வி அடைந்தன. இறுதி முயற்சி வெற்றிகரமாக அமைந்தது.

சிறுத்தை பிடிபட்டது

இதைத் தொடர்ந்து சிறுத்தை மயங்கி வலையில் விழுந்தது. இதன் மூலம் 3 மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது. வனத்துறையினர் சிறுத்தையை வெற்றிகரமாக பிடித்தனர். இந்த மீட்பு நடவடிக்கையில் 2 கால்நடை மருத்துவர்கள் உள்பட 25 பேர் கொண்ட குழு ஈடுபட்டது. மீட்கப்பட்ட சிறுத்தை அபேடா உயிரியல் பூங்காவுக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, "சிறுத்தையின் பாலினம் மற்றும் சரியான வயதை கண்டறிய அதற்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு சிறுத்தை உயிரியல் பூங்காவில் கண்காணிப்பில் வைக்கப்படும். பின்னர் அந்த சிறுத்தை வனப்பகுதியில் விடுவிக்கப்படும்" என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com