வயநாட்டில் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது: பொதுமக்கள் நிம்மதி

வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கூண்டோடு சிறுத்தையை பாதுகாப்பாக மீட்டனர்.
வயநாட்டில் சிறுத்தை கூண்டில் சிக்கியது.
சிறுத்தை
Published on

திருவனந்தபுரம்,

கேரளம் மாநிலம் வயநாட்டில் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த சிறுத்தை வனத்துறையினரால் கூண்டில் அடைக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.

வளர்ப்பு பிராணிகள் வேட்டை

கேரளம் மாநிலம் வயநாடு மாவட்டம் பொழுதனை அருகே உள்ள சேட்டு குண்ணு பகுதியில், கடந்த சில நாட்களாக குடியிருப்புப் பகுதிக்குள் சிறுத்தை ஒன்று புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது.

மேலும் சுற்றுவட்டாரக் கிராமங்களில் இரவு நேரங்களில் புகுந்த அந்த சிறுத்தை, வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு, மாடு மற்றும் நாய்களைத் தொடர்ந்து வேட்டையாடி வந்தது. இதனால் அப்பகுதி மக்கள் மாலை நேரத்திற்குப் பிறகு வீட்டை விட்டு வெளியே வர அஞ்சி, பெரும் பீதியில் வாழ்ந்து வந்தனர்.

வனத்துறை நடவடிக்கை

சிறுத்தையை உடனடியாகப் பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் வனத்துறையிடம் கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை அடுத்து, வனத்துறையினர், சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியில் அதிநவீனக் கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்தினர். தொடர்ந்து, சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்காணித்து, அது அடிக்கடி வரும் பாதையில் ஒரு கூண்டினை அமைத்து, அதற்குள் இரையையும் வைத்தனர்.

கூண்டில் சிக்கிய சிறுத்தை

இந்த நிலையில், நேற்று நள்ளிரவு குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை, வனத்துறையினர் வைத்த கூண்டுக்குள் சிக்கிக் கொண்டது. இன்று அதிகாலை கூண்டிற்குள் சிறுத்தை கர்ஜிக்கும் சத்தம் கேட்டு வந்த பொதுமக்கள், அது பிடிபட்டதைக் கண்டு வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கூண்டோடு சிறுத்தையை பாதுகாப்பாக மீட்டனர்.

பிடிபட்ட சிறுத்தைக்குக் காயங்கள் ஏதும் இன்றி ஆரோக்கியமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அச்சத்தை ஏற்படுத்திய சிறுத்தை பிடிபட்டதால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். பிடிபட்ட சிறுத்தை அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக விடப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com