அனைத்து ஜனநாயகங்களுக்கும் தாய் என்பதில் பெருமை கொள்வோம்: அமெரிக்காவில் மத்திய மந்திரி பேச்சு

அனைத்து ஜனநாயகங்களுக்கும் தாயாக இந்தியா இருப்பதற்காக நாம் பெருமைப்படுவோம் என மத்திய மந்திரி பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
அனைத்து ஜனநாயகங்களுக்கும் தாய் என்பதில் பெருமை கொள்வோம்: அமெரிக்காவில் மத்திய மந்திரி பேச்சு
Published on

லாஸ் ஏஞ்சல்ஸ்,

அமெரிக்காவில் மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை மந்திரி பியூஷ் கோயல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் தெற்கு கலிபோர்னியாவில் வர்த்தக சமூகத்தினரிடையே நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசும்போது, இந்தியாவில் முதலீடு மேற்கொள்வதற்கான பொற்காலமிது. ஒரு வளர்ச்சி அடைந்த நாடாவதற்கான இந்தியாவின் பயணத்தின் ஒரு பகுதியாக வரவேண்டும் என உங்கள் அனைவரையும் நான் அழைக்கிறேன்.

இந்தியாவில் தயாரான பொருட்கள், இந்திய கைவினைஞர்களால் உருவாக்கப்பட்ட கைத்தறி ஆடைகள், கலைபொருட்கள், காதி பொருட்கள் உள்ளிட்டவற்றை பரிசாக கொடுக்க வேண்டும் என்ற உறுதிமொழியை எடுக்க அனைவரையும் நான் வலியுறுத்தி கேட்டு கொள்கிறேன் என்று தெரிவித்து உள்ளார்.

அவர் தொடர்ந்து பேசும்போது, அனைத்து ஜனநாயகங்களுக்கும் அன்னையாக இருப்பதற்கு நாம் பெருமைப்படுகிறோம். ஒரு துடிப்பான நீதித்துறை மற்றும் சட்ட விதிகள், வலிமையான ஊடகம், வெளிப்படையான அரசு திட்ட நடைமுறைகள் ஆகியவற்றை கொண்டிருப்பதற்காக நாம் பெருமை கொள்கிறோம்.

2047-ம் ஆண்டில் சர்வதேச வளர்ச்சியை இயக்கும் ஓர் ஆற்றல் வாய்ந்த நிலையம் ஆக இந்திய பொருளாதாரம் பார்க்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர், 2047-ம் ஆண்டில் இந்தியா ரூ.2,800 லட்சம் கோடி முதல் ரூ.3,500 லட்சம் கோடி வரையிலான பொருளாதாரத்துடன் இருக்கும் என இந்திய தொழில்துறை கூட்டமைப்பு கணித்துள்ளது என்றும் அதனால், வளர்ச்சி அடைந்த நாடுகளின் வரிசையில் நம்மை அது அழைத்து செல்லும் என்றும் அவர் பேசியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com