சீன ராணுவத்தை உறுதியுடன் கையாள்வோம் - ராணுவ தளபதி நரவனே

எல்லையில் சீன ராணுவத்தை உறுதியுடன் கையாள்வோம் என்று இந்திய ராணுவ தளபதி எம்.எம்.நரவனே திட்டவட்டமாக தெரிவித்தார்.
சீன ராணுவத்தை உறுதியுடன் கையாள்வோம் - ராணுவ தளபதி நரவனே
Published on

புதுடெல்லி,

சுதந்திரத்துக்கு பின்னர் இந்திய ராணுவத்தின் முதல் தலைமை தளபதியாக பீல்டு மார்ஷல் கே.எம்.கரியப்பா, 1949-ம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ந்தேதி பதவி ஏற்றார். இந்த நாள், ஒவ்வொரு ஆண்டும் ராணுவ தினமாக கொண்டாடப்படுகிறது.

இந்த நாளையொட்டி, டெல்லியில் இந்திய ராணுவத்தின் தற்போதைய தளபதி எம்.எம்.நரவனே, நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கிழக்கு லடாக்கில் இந்திய சீனப்படைகள் பகுதியளவில் திரும்பப்பெறப்பட்டுள்ளன. ஆனாலும் எந்த வகையிலும் அச்சுறுத்தல் குறையவில்லை. நாம் மிக உயர்ந்த அளவில் செயல்படுவதற்கு தயார் நிலையில் தொடர்ந்து இருந்து வருகிறோம். அதே நேரத்தில் சீன ராணுவத்துடன் பேச்சுவார்த்தையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சீனாவின் புதிய நில எல்லைச்சட்டத்தின் எந்தவொரு ராணுவ மாற்றங்களையும், சமாளிப்பதற்கு இந்திய ராணுவம் போதுமான அளவில் தயாராக உள்ளது. கிழக்கு லடாக் எல்லைப்பகுதியில் சீன ராணுவத்தை நாம் உறுதியுடன் எதிர்கொள்வோம். உறுதியான முறையில் கையாள்வோம். எந்தவொரு தற்செயல்களையும் கவனித்துக்கொள்ளுகிற வகையில் பாதுகாப்புகள் தேவையான அளவுக்கு உள்ளன.

வடக்கு எல்லையில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு முழுமையான முயற்சி, விரிவான முறையில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. எல்லைப்பகுதியில் உள்ள அனைத்து இரட்டை பயன்பாட்டு உள்கட்டமைப்புகளில் எதை பயன்படுத்த முடியும் என்பதை கண்டறிய தேவையான முயற்சிகள் பெரிய அளவில் நடைபெற்று வருகின்றன.

தற்போதைய எல்லை நிலையை சீனா ஒருதலைப்பட்சமாக மாற்றுவதற்கு முயற்சித்தால், அதற்கு மிக வலுவான முறையில் நமது படைகள் பதில் அளிக்கும். நம் மீது வருகிற எந்தவொரு சவாலையும் நாம் எதிர்கொள்வதற்கு மிகச்சிறப்பாகவே தயார் நிலையில் இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

சீன ராணுவத்துடனான 14-வது சுற்று பேச்சுவார்த்தை தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு இந்திய ராணுவ தளபதி எம்.எம்.நரவனே பதில் அளிக்கையில், கிழக்கு லடாக்கில் ரோந்து புள்ளி 15-ல் (ஹாட் ஸ்ரிங்க்ஸ்) உள்ள பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு விடும் என்று இந்தியா நம்பிக்கை வைத்துள்ளது என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com