கேரளாவில் பெண் டாக்டரை கொன்ற ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை - கோர்ட்டு தீர்ப்பு

மருத்துவமனை வளாகத்தில் டாக்டர் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
கேரளாவில் பெண் டாக்டரை கொன்ற ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை - கோர்ட்டு தீர்ப்பு
Published on

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வந்தவர் வந்தனா தாஸ். கடந்த 2023-ம் ஆண்டு மே 10-ந்தேதி, வந்தனா தாஸ் பணியில் இருந்தபோது, சந்தீப் என்பவரை காவல்துறையினர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.

ஆசிரியராக பணியாற்றி வந்த சந்தீப், சம்பவத்தன்று அக்கம்பக்கத்தினருடன் சண்டையிட்டுள்ளார். இதனால் அவரது காலில் காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவரே போலீசாரை அழைத்து, தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று சந்தீப்பை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

மேலும், அவர் போதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், மருத்துவமனையில் சந்தீப் தன்னுடன் வந்த காவலர்களையும் தாக்கியுள்ளார். பின்னர் தனக்கு சிகிச்சை அளித்த டாக்டர் வந்தனா தாஸ் மீது அங்கிருந்த கத்திரிக்கோலை எடுத்து சரமாரியாக குத்தியுள்ளார். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த வந்தனா தாஸ், சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கோட்டயம் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட வந்தனா தாஸ், தனது பெற்றோரின் ஒரே மகள் ஆவார். மருத்துவமனை வளாகத்தில் டாக்டர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கு கொல்லம் மாவட்ட கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது.

இந்த வழக்கு தொடர்பாக அனைத்து தரப்பு விசாரணைகளும் நிறைவடைந்த நிலையில், டால்டர் வந்தனா தாஸ் கொலை வழக்கில் ஆசிரியர் சந்தீப் குற்றவாளி என கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கில் சந்தீப்புக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பு குறித்து வந்தனா தாஸ் தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், குற்றவாளி சந்தீப்புக்கு மரண தண்டனை பெற்றுத்தர மேல்முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com